ஆம்ஸ்ட்ராங் பேரணி 
அரசியல்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்கும் பா.இரஞ்சித் பேரணி...விசிக-வினருக்கு மறைமுக தடை போட்ட திருமாவளவன்!

நாளை மாலை ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிகேட்டு பா.இரஞ்சித் பேரணி அறிவித்திருக்கும் நிலையில் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம் என திருமாவளவன் மறைமுக அறிக்கை வெளியிட்டிருப்பது தலித் அமைப்புகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது!

Puviyarasan Perumal

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு நீதி வேண்டி நாளை மாலை (ஜூலை 20) சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நினைவேந்தல் பேரணி நடத்துவதாக இயக்குநர் பா.இரஞ்சித் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

பா.இரஞ்சித் தனது அறிவிப்பில் ''பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமை 20-ம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறுவதாகவும். அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் அணித்திரளுமாறும்'' வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

மாயாவதி, திருமாவளவன்

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விசிக கட்சியினருக்கு அறிவுறுத்தல் வெளியிட்டருப்பதாக விடுதலை சிறுத்தைகள் காட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில் ''பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையைக் கண்டித்தும், நீதிகோரியும் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளில் விசிகவுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவோர் பங்கேற்கும் நிலை இருந்தால் அத்தகைய நிகழ்வுகளில் சிறுத்தைகள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்'' என தொல்.திருமாவளவன் அறிவுறுத்தியிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியிருக்கிறது!