அண்ணாமலை 
அரசியல்

அண்ணாமலை, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லியில் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு... எம்.பி ஆகிறாரா அண்ணாமலை?

இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை என இருவரையும் நேரில் சந்திக்க அழைத்திருக்கிறார் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

Prakasam

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது உள்கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட புகார்கள் பறந்துவரும் நிலையில் இன்று அமித் ஷா அவரை நேரில் சந்திக்க அழைத்திருக்கிறார். அதேநேரம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் இன்று அமித் ஷாவை சந்திக்க இருக்கும் நிலையில் தமிழக பாஜக-வில் மாற்றங்கள் நிகழலாம் எனச் சொல்லப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்று சர்வதேச அரசியல் படிக்க விரும்புதாகச் சொன்னார் அண்ணாமலை. ''அவரை தமிழக பாஜக பதவியில் இருந்து தூக்கியடிக்க இருக்கிறார்கள், அதனால்தான் அண்ணாமலை இங்கிலாந்துக்கு படிக்கப்போகிறேன் என்று சொல்கிறார்'' என்கிற கருத்துகள் பரவ ஆரம்பித்தன. இதற்கு ஏற்றார் போல சில நாட்கள் அமைதியாக இருந்த அண்ணாமலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிட்டார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை மிகவும் நேரடியாகத் தாக்கிப்பேசி சலசப்பை உண்டு செய்தார் அண்ணாமலை. இந்நிலையில் அதிமுக மீண்டும் ஒருங்கிணையலாம் என்கிற பேச்சுகள் எழும்ப ஆரம்பித்திருப்பதோடு, தமிழக காங்கிரஸுக்குள்ளும் திமுகவுக்கு எதிராக சிலர் பேச ஆரம்பித்திருப்பதால் தமிழக அரசியல் சூழல் குறித்து நேரடியாகப் பேச அண்ணாமலை, ஆளுநர் என இருவரையும் நேரடியாக அழைத்திருக்கிறார் அமித் ஷா என்கிறார்கள்.

இன்னொருபக்கம் அண்ணாமலைக்கு மத்தியபிரதேசத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவி அளிக்கப்படலாம் என்கிற பேச்சும் எழுந்திருக்கிறது.

இதற்கிடையே ஆளுநர் ரவி, அண்ணாமலை இருவருமே தமிழக ஆளுநர், தமிழக பாஜக தலைவர் பதவிகளில் இருந்து மாற்றப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த நிலையில் கவர்னர் ரவி மீண்டும் இன்று அமித்ஷாவை சந்திப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவுக்குள் தமிழக பாஜகவில் அண்ணாமலை, ஆர்.என்.ரவியின் நிலை என்னவாக இருக்கும் என்பது தெரிந்துவிடும்!