விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை எனும் இடத்தில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் மாநாட்டு மேடை, அலங்காரங்கள், ஏற்பாடுகள் எல்லாம் மிகத்தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையே மாநாட்டில் விஜய் தனது கொள்கைகளை அறிவிக்க இருக்கும் நிலையில், மாநாட்டு திடலில் தலைவர்களின் ராட்சத கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பெரியார், அம்பேத்கரோடு, காமராஜரின் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. பெரியார் சமூக நிதியையும், அம்பேத்கர் சமத்துவத்தையும் வலியுறுத்திய தலைவர்கள் என்கிற முறையில் அவர்களின் படம் இடம்பெற்றிருக்கிறது. இதற்கிடையே காமராஜரின் படம் இடம்பெற்றிருப்பதுதான் விஜய் சொல்ல வருவது என்ன என்கிற விவாதத்தை தொடங்கிவைத்திருக்கிறது.
காங்கிரஸின் முக்கிய தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான காமராஜர் எளிமையின் சிகரமாகத் திகழ்ந்தவர். சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திடங்களை தமிழ்நாட்டுக்குத்தந்தவர். இருப்பினும் இவருக்கு காங்கிரஸ்காரர் என்கிற பிம்பமே அதிகம் இருப்பதோடு, நாடார் இன மக்களின் தலைவர் என்கிற பிம்பமும் இருக்கிறது.
1957-ம் ஆண்டு முக்குலத்தோரைச் சேர்ந்த ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் காமராஜரை எதிர்த்து அப்போது கட்சியில் இருந்த முக்குலத்தோர் பலர் வெளியேறினார்கள். இந்த விவகாரத்தால் முக்குலத்தோருக்கு எதிரானவர் காமராஜர் என்கிற பிம்பமும் உருவானது. இந்நிலையில் காமராஜரை விஜய் முன்னிலைப்படுத்தியிருப்பதன் மூலம் முக்குலத்தோரின் ஆதரவை இழப்பார் என்கிற கருத்துகள் உலவ ஆரம்பித்திருக்கிறது.
இதற்கிடையே அண்ணாவை விஜய் தவிர்த்திருப்பதன் மூலம் திராவிட அரசியலுக்குள் தான் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார் விஜய்.