விஜய் மாநாடு 
அரசியல்

‘’விக்கிரவாண்டி மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி மறுத்தால் உச்சநீதிமன்றம் வரை போவோம்’’ - விஜய் ஆவேசம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் முதல் அரசியல் மாநாடு வரும் செப்டம்பர் 23-ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமதம் நிகழ்வதாக விஜய் தரப்பில் சொல்லப்படுகிறது!

Jeeva

கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கிறார். மாநாடு நடத்துவதற்காக மதுரை, திருச்சி, சேலம் எனப் பல இடங்கள் பார்க்கப்பட்ட நிலையில், இறுதியாக விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை எனும் பகுதி முடிவுசெய்யப்பட்டது.

இங்கு உள்ள 85 ஏக்கர் நிலத்தில் மாநாடு நடத்துவதற்காக ஆகஸ்ட் 28-ம் தேதி விஜய் கட்சி சார்பில் போலீஸிடம் அனுமதி கேட்டு விண்ணப்பமும் கொடுக்கப்பட்டது. இடத்துக்கான வாடகையும் அதன் உரிமையாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் தரப்பில் நேற்று 21 கேள்விகள் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

விஜய்

இந்தக் கேள்விகளுக்கு விஜய் தரப்பில் இருந்து தரப்படும் பதில்களை அடிப்படையாக வைத்தே மாநாட்டுக்கு அனுமதி தருவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்கிறது போலீஸ் தரப்பு.

இதற்கிடையே செப்டம்பர் 23-ம் தேதி மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லையென்றால் ஜனவரியில் மாநாடு நடத்த தவெக-வின் ஆனந்த் தேதி பார்ப்பதாக தகவல் பரவியது. இதை முற்றிலுமாக அக்கட்சியினர் மறுத்துள்ளனர். ‘’மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி தரவில்லையென்றால் சுப்ரீம் கோர்ட் வரை போய் அனுமதி வாங்குவோம். தேதியை மாற்றும் எண்ணமே இல்லை. மாநாடு பிரமாண்டமாக நடக்கவேண்டும்'’ என விஜய் சொன்னதாக சொல்கிறார்கள்.