மு.க.ஸ்டாலின், சீமான், அன்புமணி ராமதாஸ் 
அரசியல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : வன்னியர் தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் தலித்துகள்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக போட்டியில் இருந்து விலகியிருக்கும் நிலையில் தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் என மும்முனைப்போட்டியாக மாறியிருக்கிறது விக்கிரவாண்டித் தேர்தல்.

News Tremor Desk

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 8 தகவல்கள் இங்கே!

1. புதுத்தொகுதி!

விழுப்புரம் மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி 2008 சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவானத் தொகுதி. அதனால் 2011, 2016, 2019-ல் இடைத்தேர்தல் மீண்டும் 2021  சட்டமன்றத் தேர்தல் என இதுவரை நான்கு சட்டமன்றத் தேர்தல்களையே சந்தித்திருக்கிறது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

2. திமுக Vs அதிமுக

2011-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் அப்போதைய ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிரான எதிர்ப்பலை வீசியதால் அதிமுக கூட்டணி சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர்.ராமமூர்த்தி கிட்டத்தட்ட 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராதாமணியை தோற்கடித்தார். 2016 தேர்தலில் கூட்டணி கட்சிகள் எதுவும் இல்லாமல் திமுகவும், அதிமுவும் நேரடியாக இத்தொகுதியில் மோதின. இதில் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ராதாமணி கிட்டத்தட்ட 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.வேலுவைத் தோற்கடித்தார். வெற்றிபெற்ற மூன்று வருடத்துக்குள்ளாகவே ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக மரணிக்க, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அதிமுக ஆளும்கட்சியாக இருந்ததால் இந்தத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் திமுக வேட்பாளர் புகழேந்தியைவிட கிட்டத்தட்ட 45 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். 2021 தேர்தலில் இதே இரண்டு பேர் மீண்டும் போட்டியிட இந்தமுறை புகழேந்தி, முத்தமிழ்ச்செல்வனைவிட 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏ ஆனார். 

3. ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தல்!

இரண்டாவது முறையாக எம்எல்ஏ இறப்பால் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக எம்.எல்.ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அதனால் தற்போது இந்ததொகுதியில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை இந்தத்தொகுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி ராமதாஸ்

4. வெற்றியைத் தீர்மானிக்கும் சாதி!

வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என சொல்லப்பட்டாலும், தலித்துகளும் அதிகம் வசிக்கும் தொகுதி விக்கிரவாண்டி. கணக்கெடுப்பின்படி வன்னியர்கள் 35 சதவிகிதமும், தலித்துகள் 30 சதவிகிதமும் இங்கே வசிக்கிறார்கள். அதனால் இந்த இரண்டு சாதிதான் இங்கே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.

அன்னியூர் சிவா - மு.க.ஸ்டாலின்

5. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

விழுப்புரம் மாவட்டம் அன்னியூரைச் சேர்ந்த சிவா-வை வேட்பாளராக அறிவித்திருக்கிறது திமுக. இவர் தற்போது திமுக விவசாயிகள் தொழிலாளர் அணியின் செயலாளராக இருக்கிறார். 37 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக-வில் இருக்கும் அன்னியூர் சிவா இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டவர் இல்லை. திமுக அமைச்சர் பொன்முடியின் தீவிர ஆதரவாளரான சிவா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். 

சி.அன்புமணி - அன்புமணி ராமதாஸ்

6. இரண்டாவது முறையாக போட்டியிடும் சி.அன்புமணி

58 வயதாகும் பாமக வேட்பாளரான சி. அன்புமணி வன்னியர் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவராகப் பதவி வகித்துவருகிறார். ஏற்கெனவே இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் இதே விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1 லட்சத்து 77 ஆயிரம் பேர் வாக்களித்த இந்த தேர்தலில் 41,428 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடம்பிடித்திருந்த சி.அன்புமணிக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பளித்திருக்கிறது பாமக.

அபிநயா பொன்னிவளவன்

7. யார் இந்த டாக்டர் அபிநயா பொன்னிவளவன்?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணியை எதிர்த்துப்போட்டியிட்ட அபிநயா பொன்னிவளவனைத்தான் நாம் தமிழர் கட்சியின் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் சீமான். நாடாளுமன்றத் தேர்தலில் 65 ஆயிரத்து 381 வாக்குகள் பெற்று நான்காவது இடம்பிடித்திருந்தார் அபிநயா. ஹோமியோபதி மருத்துவரான அபிநயாவுக்கு வயது 28. இவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். 

8. தலித்துகளின் ஓட்டு யாருக்கு? 

திமுக, பாமக என இரண்டு கட்சி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தலித்துகளின் வாக்குகள் திமுகவுக்கே போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக போட்டியில் இருந்து விலகியிருப்பதால் அதிமுகவின் வாக்குகளும் சாதி அடிப்படையில் திமுக, பாமவுக்குப் பிரியும். இதனால் திமுக-வுக்கே இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறது.