29 வயதில் இந்திய அணிக்குள்… யார் இந்த அபிமன்யூ ஈஸ்வரன்?!
இதுவரை 99 உள்ளூர் போட்டிகளில் விளையாடி 7000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்திருப்பவர் அபிமன்யூ ஈஸ்வரன். தமிழ் தந்தைக்கும், பஞ்சாபி தாய்க்கும் பிறந்த அபிமன்யூ ஈஸ்வரன் பெங்கால் அணிக்காக தற்போது ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடிவருகிறார். சமீபத்தில் நடந்த ரஞ்சி, இராணி கோப்பை, துலீப் டிராஃபி என எல்லா உள்ளூர் போட்டிகளிலும் சதம் அடித்திருக்கிறார் அபிமன்யூ.
ஓப்பனிங் பேட்ஸ்மேனான அபிமன்யூ சமீபத்தில் நடந்த உத்திரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியிலும் 127 ரன்கள் குவித்தார். இதுவரை 27 சதங்கள் அடித்திருக்கும் அபிமன்யூ, கடைசியாக நடந்த 9 போட்டிகளில் 4 சதங்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரே இன்னிங்ஸில் 191 ரன்கள் குவித்தார். தொடர்ந்து சதங்களாக அடித்து தள்ளியிருக்கும் அபிமன்யூவுக்கு இறுதியாக இந்திய அணிக்குள் இடம்கிடைத்திருக்கிறது.
''என்னுடைய வேலை ஆட்டத்தில் கவனம் செலுத்துவதுதான். தொடர்ந்து என்னுடைய பர்ஃபாமென்ஸை முன்னேற்றிவருகிறேன். செலக்டர்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை இந்திய அணிக்குள் தேர்வு செய்தால் சந்தோஷம். அதுவரை நான் என்னுடைய வேலையை சரியாக செய்வேன்'' என்று சமீபத்தில் பேட்டியளித்திருந்தார் அபிமன்யூ ஈஸ்வரன்.
இந்தமுறை அபிமன்யூவை ஏமாற்றாமல் தேர்வாளர்கள் அவரை இந்திய அணிக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே 2021 இங்கிலாந்து டூரில் ரிசர்வ் பிளேயராக இடம்பிடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட் பால் ஸ்பெஷலிஸ்ட் என சொல்லப்படும் அபிமன்யூவுக்கு இந்தமுறை ப்ளேயிங் லெவனில் இடம்கிடைக்கும் என நம்புவோம்!