ரவிச்சந்திரன் அஷ்வின் 
விளையாட்டு

கோலியின் கறி விருந்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அஷ்வின் பரிமாறியது சுத்த சைவம்தான்… ஆனால்?!

நேற்று சென்னையில் வங்கதேசத்துக்கு எதிராகத் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் சதம் அடித்து சாதனைப் படைத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். 144 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியை ரவீந்திர ஜடேஜாவோடு சேர்த்து மீட்டிருக்கிறார் அஷ்வின். அவருடைய ஆட்டத்தில் என்ன ஸ்பெஷல்?!

Aiden

30 விநாடிகள் கொண்ட வீடியோதான்... அதைக்கூட பார்க்க முடியாமல் ஸ்கிப் செய்யும் காலம் இது. ஷார்ட்ஸோ, ரீல்ஸோ, மீம்ஸோ கண்களின் கவனத்தை ஈர்த்து, மூளைக்குள் பரவசத்தை நிகழ்த்தினால் மட்டுமே அதைக்கூட அடுத்த நொடி பார்க்கமுடிகிறது. அப்படி ஒவ்வொரு நொடிக்கும் ஒரு பரசவம், அதிசயம், கவர்ச்சி தேவைப்படும் இந்த காலகட்டத்தில் ஐந்து நாட்கள் ஆடும் டெஸ்ட் மேட்ச்சைப் பார்க்கவைக்க சாதாரண வீரர்கள் அல்ல மாவீரர்கள் தேவை. 

அப்படிப்பட்ட மாவீரனைக் காணவே, மாவீரனின் ஆட்டத்தை ரசிக்கவே, மாவீரனைப் போற்றவே நேற்று சென்னையில் தொடங்கிய வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்துக்கு கூட்டம் கூடியது. மைதானத்துக்கு நேரடியாக வந்திருந்தவர்கள் மட்டுமல்ல, டிவியின் முன் கூடியிருந்தவர்கள் அத்தனைப் பேரின் கண்களும் கோலி எனும் மாவீரன் எப்போது களத்துக்கு வருவான் என்று எதிர்பார்த்தே இருந்தது. 

ரோஹித் ஷர்மா அவுட், ஷுப்மன் கில் அவுட் என இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததும்தான் ரசிகர்கள் உற்சாகம் கொண்டனர். ஆம், 8 மாதங்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் ஆடுகிறான் அந்த மாவீரன்.

ரவிச்சந்திரன் அஷ்வின்

அதுவும் சென்னை பிட்ச் போன்ற சவாலான ஆடுகளத்தில் கடந்த தலைமுறையின் மாவீரன் சச்சின் டெண்டுல்கர் எவ்வளவோ சாதனைகள் படைத்திருக்கிறார். அதுபோன்ற சாதனையை விராட் கோலியும் படைக்கப்போகிறார் என்கிற நம்பிக்கை சேப்பாக்கத்தில் வீசிய காற்றில் கூட கலந்திருந்தது. ஆனால், அந்த மாவீரன் நேற்று ஏமாற்றம் தந்தான். வெறும் 6 ரன்களில் கோலி அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடந்துபோது கிட்டத்தட்ட சென்னை டெஸ்ட் அதன் சுவாரஸ்யத்தை முற்றிலுமாக இழந்திருந்தது.

‘’இனி என்னப்பா’’, ‘’பாடியை எத்தனை மணிக்கு எடுப்பாங்க'’ என்பதுபோல ஆட்டம் துக்க நிகழ்வுக்குத் தயாரானது. விக்கெட்டுகள் ஒன்றன் ஒன்றாக போய்க்கொண்டிருந்தன. பாகிஸ்தானுக்குப் போய் பாகிஸ்தானையே சாய்த்தது போல, வங்கதேசம் இந்தியாவில் வைத்தும் இந்திய அணியை சம்பவம் செய்துவிடுமோ என்கிற பயம்கூட ஒரு கட்டத்தில் எழுந்தது. ஆனால், ரவிச்சந்திரன் அஷ்வின் எனும் ஒற்றை மனிதன் BORE ஆன ஆட்டத்தை மாற்றியது மட்டுமல்ல, வங்கதேச பெளலர்களுக்கு எதிராக ஒரு போரையே நிகழ்த்திவிட்டார்.

ரவிச்சந்திரன் அஷ்வின்

ரசிகர்கள் இழந்த நம்பிக்கையை மீட்டுக் கொண்டுவர அஷ்வினுக்கு ஒரு சில பந்துகளே தேவைப்பட்டது. நஷித் ரானாவின் அதிவேகப்பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வர, அஷ்வின் பேக்ஃபூட்டுக்குப் போய் பந்தை மிக லாவகமாக பேட்டால் ஒரு மெல்லிய தட்டு தட்ட அது பவுண்டரியை நோக்கிப் பாய்ந்தது. இந்த ஒற்றை ஷாட் ‘’இன்னைக்கு அஷ்வின் நின்னு ஆடுவான்பா’’ என சொல்லவைத்தது. அதுபோலவே நிலைத்து நின்று ஆடி 108 பந்துகளில் 100 ரன்கள் அடித்து, இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று இந்திய அணியை சரிவில் இருந்து காப்பாற்றி சாகசம் செய்திருகிறார் அஷ்வின்.

38 வயதான அஷ்வினின் ஆட்டம் கிரிக்கெட்டுக்கு வயது ஒரு தடையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. பந்து வீச்சாளர்களின் வேகத்தைப் பயன்படுத்தி, அதற்கேற்றபடி பேட்டால் ஒரு சின்ன புஷ் மட்டுமே கொடுத்து பவுண்டரிகளை சேர்த்தார் அஷ்வின். அவரது நேற்றைய இன்னிங்ஸில் கவர் டிரைவ்கள் இருந்தன, ஃப்ளிக்ஸ் இருந்தன, ஸ்வீப் ஷாட்கள் இருந்தன. ஏன், டெஸ்ட் மேட்ச்சில் டி20 ஷாட் கூட ஆடி அசத்தினார் அஷ்வின்.

அஷ்வினின் பேட்டிங்கில் கோலியின் கிளாஸ் இல்லை, மாஸ் இல்லைதான். ஆனால், டெக்னிக்ஸ் இருந்தது. பொறுமை இருந்தது. நம்பிக்கை இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்த்து ஆடும் துணிச்சல் இருந்தது.

கோலியின் கறி விருந்தை சுவைக்க வந்த ரசிகர்களுக்கு, அஷ்வின் பரிமாறியது என்னவோ சுத்த சைவம்தான். ஆனால், சுவை அபாரம்!