ரொனால்டோ யூடியூப் சேனல் தொடங்கிய 90 நிமிடங்களுக்குள், 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கடந்து உலகின் மிக வேகமான சேனலாக சாதனைப்படைத்தது. தற்போது, இந்த சேனல் ஆரம்பித்து 24 மணி நேரங்களைக் கடந்திருக்கும் நிலையில் 28.1 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்களைக் கொண்டுள்ளது.
இந்த புதிய சேனலில் ரொனால்டோ 19 வீடியோக்களை வெளியிட்டுள்ளார், இதில் அவரது குடும்பம் மற்றும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கும் வீடியோக்கள் அடங்கும். இந்த சாதனையை கொண்டாடும் விதமாக, ரொனால்டோ தனது குழந்தைகளுக்கு யூடியூப் வழங்கிய தங்க "ப்ளே பட்டன்" விருதைப் பரிசளித்து அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "என் குடும்பத்திற்கான ஒரு பரிசு ❤️ எல்லா சப்ஸ்கிரைபர்ஸுக்கும் நன்றி!" என அவர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ரொனால்டோவின் சேனல் அறிமுகம் உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. எட்டு முறை பலோன் டி’ஓர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸியின் 2.31 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்களைக் கடந்த ரொனால்டோ, தொடர்ந்து பார்வையாளர்களைக் குவித்துவருகிறார். யூடியூப்பில் அதிகபட்சமாக சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட Mr. Beast-ன் சாதனையான 331 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை ரொனால்டோ விரைவில் முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
39 வயதில், ரொனால்டோ மைதானத்தில் மட்டுமல்ல, டிஜிட்டல் உலகிலும் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறார். ரொனால்டோவின் ஃபேஸ்புக்கில் 170 மில்லியன், X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் 112.6 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார்.
இந்த யூடியூப் சேனல் மூலம் ரொனால்டோவின் ரசிகர்கள் அவரது மைதானத்திற்கு வெளியே உள்ள வாழ்க்கையை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதில் அவரது பயிற்சி முறைகள், பர்சனல் தருணங்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் நிறைய பகிரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.