ருத்துராஜ் கெய்க்வாட் 
விளையாட்டு

தோனியைப் பழிவாங்க கெளதம் கம்பீரால் பலிகடா ஆக்கப்பட்டாரா ருத்துராஜ் கெய்க்வாட்… நீக்கம் ஏன்?!

புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கெளதம் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாட இருக்கிறது. வரும் ஜூலை 27-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தத் தொடரில் மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.

Aiden

அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு வெவ்வேறு கேப்டன்களின் கீழ் அணியை அறிவித்துள்ளது. டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருநாள் தொடருக்கு ரோஹித் ஷர்மாவே கேப்டனாகத் தொடர்கிறார். ஆனால், டி20 அணித்தேர்வில் மிக முக்கியமான மாற்றமாக ருத்துராஜ் கெய்க்வேட் சேர்க்கப்படவில்லை.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருத்துராஜ் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியும் அவரை அணியில் இருந்து நீக்கியிருப்பது பல்வேறு கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது. 

ருத்துராஜ் கெயிக்வாட்

சமீபத்தில் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வேவில் விளையாடிய டி20 தொடரில் இடம்பெற்று சிறப்பாகவே ஆடியிருந்தார் ருத்துராஜ் கெயிக்வாட். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் நான்கு போட்டிகளில் இவர் விளையாடினார். ஐந்தாவது போட்டியில் அணியின் ப்ளேயிங் லெவனில் இருந்து காரணமே இல்லாமல் தூக்கப்பட்டார். 

ஓப்பனிங் பேட்ஸ்மேனான ருத்துராஜுக்கு மூன்று போட்டிகளில்தான் பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு போட்டியில் 9 பந்துகளில் 7 ரன்கள் அடித்தவர், அடுத்த இரண்டு போட்டிகளில் 47 பந்துகளில் 77 ரன் நாட் அவுட், 28 பந்துகளில் 49 ரன்கள் என சிறப்பாகவே ஆடினார். அப்படியிருந்தும் இலங்கை தொடரில் இருந்து ருத்துராஜின் பெயர் நீக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.  

ருத்துராஜ் கெயிக்வாட்

‘’2026 உலகக்கோப்பை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அணியை இப்போதே உருவாக்க நினைக்கிறார் கெளதம் கம்பீர். ரோஹித் ஷர்மா - விராட் கோலி என 2024 உலகக்கோப்பையில் இருந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை அப்படியே சுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் என வலுவான பார்ட்னர்ஷிப்பாக உருவாக்க நினைக்கிறார். சஞ்சு சாம்சன், ரிஷப் பன்ட் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் ருத்துராஜுக்கு வாய்ப்பளிக்க முடியாமல் போய்விட்டது. சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் என மிடில் ஆர்டர் ஸ்ட்ராங்காக இருக்கும் நிலையில் ருத்துராஜுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் இருக்காது என்பதே அவரை சேர்க்காததற்கு காரணம்'’ என்கிறார்கள் தேர்வுக்குழுவுக்கு நெருக்கமானவர்கள்.

ஆனால், விமர்சகர்களோ தோனி மீதான காழ்ப்புணர்ச்சியை மும்பை லாபியும், கெளதம் கம்பீரும் தீர்த்துக்கொள்ள ருத்துராஜை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ருத்துராஜ் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராகவே இருந்தாலும் வெளிப்படையாகவே அரசியல் செய்கிறார்கள் என்கிறார்கள்.