கெளதம் கம்பீர் 
விளையாட்டு

வீரர்களின் விருப்பத்தையும் மீறி கெளதம் கம்பீர் பயிற்சியாளராக நியமனம்… அரசியலா, அக்கறையா?!

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மேட்டுக்குமான பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியிட்டிருக்கிறார்.

Aiden

முன்னணி வீரர்கள் பலரும் கெளதம் கம்பீர் பயிற்சியாளராக தேர்ந்தெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டி20 உலகக்கோப்பை முடியும் வரை, விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா என சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிக்குவரை பொறுத்திருந்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிசிசிஐ.

இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக 147 ஒருநாள், 58 டெஸ்ட், 37 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் கம்பீர். ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள் அடித்திருக்கிறார். இவருக்கு ஆரம்பத்தில் இந்தியாவின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தது. பின்னர் அது உச்சக்கட்டத்தை அடைந்தது.

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்கள் அடித்து அதிகபட்ச ரன் ஸ்கோரராக இருந்த கம்பீர் அதன்பிறகு நடந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் பயங்கரமாக சொதப்பினார். இதனால் 2014-ம் ஆண்டோடு அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைகொடுக்கபட்டது.

அமித் ஷா, கெளதம் கம்பீர்

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று இரண்டு முறை கோப்பையைப் பெற்றுத்தந்தவர் கம்பீர். பின்னர் கொல்கத்தா அணியில் இருந்து டெல்லி போனார். ஆனால், டெல்லி டீமில் இருக்கும்போது ஃபார்ம் அவுட் ஆனதால் 2018 ஐபிஎல் போட்டித்தொடரின் பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து விலகி பென்ச்சில் உட்கார்ந்தார் கம்பீர். அந்த ஆண்டோடு அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுதாக அறிவித்தார்.

2019 தேர்தலில் பாஜக சார்பில் டெல்லியில் வெற்றிபெற்று எம்பி-யாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். பின்னர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அணிக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்தவர் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய காரணமாக இருந்தார். 2024 சீசிசனில் ஷாருக்கான் கெளதமை மீண்டும் கொல்கத்தாவுக்குத் தூக்க மென்ட்டராக உள்ளே வந்தார் கம்பீர். இந்த ஆண்டு கொல்கத்தா ஐபிஎல் கோப்பையும் வென்றது. 

ஐபிஎல் இறுதிக்கட்டத்தில் இருக்கும்போதே கம்பீரை பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்திவிட்டது பிசிசிஐ. அமித் ஷாவின் மகனான ஜெய் ஷாவின் பர்சனல் சாய்ஸ் கம்பீர். அதனால் கோலி, ஜடேஜா என வீரர்களின் எதிர்ப்பு வெளிப்படையாக இருந்துமே கம்பீரை பயிற்சியாளராகத் தேர்வு செய்திருகிறார்கள்.

2027 உலகக்கோப்பை வரை கெளதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார்!