2008 முதல் 2011 வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவங்களிலும் தனது திறமையை நிரூபித்தவர் கம்பீர். கடும் உழைப்பால் மட்டுமே அணிக்குள் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். 2007 ஒரு நாள் உலகக் கோப்பை இந்திய அணிக்குள் கெளதம் கம்பீருக்கு இடம் கிடைக்காதது அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய திருப்பம்.
இந்த வெளியேற்றம் அவரை இன்னும் கடுமையாகப் போராட வைத்தது. விடா முயற்சியாலும், மன உறுதியாலும் மீண்டு வந்து தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்குள் இடம்பிடித்தார். இந்திய அணிக்குள் மீண்டும் திரும்பியதும், 2008-2011 காலத்தில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் 11 தொடர் அரைச் சதங்களை அடித்தார். இது விவியன் ரிச்சர்ட்ஸுக்கு இணையான சாதனை. 2008- 2010 என இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 8 சதங்கள் அடித்தார். எல்லாமே இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய சதங்கள்.
கெளதம் கம்பீர் என்றதும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றிதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், 2007 தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதற்கும் மிக முக்கிய காரணம் கெளதம் கம்பீர்தான். ஜோஹனஸ்பர்க்கில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 54 பந்துகளில் 75 ரன்கள் அடித்தார் கெளதம் கம்பீர். அவர்தான் அந்தப் போட்டியின் டாப் ஸ்கோரர். அன்று அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன்கள் 30.
2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் அவர் அடித்த 97 ரன்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமானவை. இலங்கையின் பெளலர்களிடம் சிக்கி சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் என இரண்டு முக்கியமான ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பியபோது இந்தியா தடுமாறத் தொடங்கியது. ஆனால், எந்த டென்ஷனும் இல்லாமல் ஆடி, ரசிகர்களின் டென்ஷனைக் குறைத்தார் கெளதம் கம்பீர்.
அந்த ஒரு நெருக்கடியான சூழலில் கம்பீர்தான் இந்த அணியால் மீண்டு வரமுடியும் என முதலில் மக்களை நம்ப வைத்தார். ஃபைனல் சிக்ஸர் தோனி அடித்திருக்கலாம்… ஆனால், விதை கம்பீர் போட்டது. அந்த காலகட்டத்தில் இந்திய அணியின் எல்லா சாதனைகளிலும் முக்கிய பங்காற்றிய கெளதம் கம்பீர், தன் நேர்மையான குணத்தால் மட்டுமே நினைவுகூறப்படுகிறார். பூசி மொழுகும் பழக்கம் எல்லாம் இல்லை. முகத்துக்கு நேராக எதையும் பேசிவிடுவார்.
தோனி வென்ற இரண்டு உலகக்கோப்பைகளுக்குப் பின்னாலும் தன் உழைப்பு இருக்கிறது, ஆனால் அது எல்லா தளங்களிலும் மறைக்கப்படுகிறது என்பதுதான் கெளதம் கம்பீரின் கோபம். இதை மறைத்துவைக்காமல் வெளிப்படையாகவேப் பேசியிருக்கிறார்.
விஜய் மற்றும் ஷிகர் தவான் போன்ற வீரர்களின் வருகையால், கெளதம் கம்பீர் அணியில் தன் இடத்தை இழந்தார். ஆனால், ஐபிஎல் லீக்கில், குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தலைமையேற்று 2012 மற்றும் 2014 ஐபிஎல் கோப்பைகளை வெல்லவைத்தார் கம்பீர். 2018 ஐபிஎல் சீசனில் தன்னுடைய ஆட்டம் சரியில்லை என்று உணர்ந்தபோது, கம்பீர் தானாகவே தனது இடத்தை விட்டுக்கொடுத்து பென்ச்சில் உட்கார்ந்தார்.
மீண்டும் 2023-ல் அதே கொல்கத்தா அணியின் மென்ட்டராக இணைந்து அணியை சாம்பியன் ஆக்கியவர் இப்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்ச்சியாளராக உயர்ந்து நிற்கிறார்.
கம்பீரின் அடையாளம்!
கிரிக்கெட் வீரர்கள் பலரும் மக்கள் முன்பாக, டிவி கேமராக்கள் முன்பாக நெகிழ்ச்சியான பேச்சுக்களை தேர்வு செய்யும்போது, கம்பீர் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவார். தோனியுடன் மோதல், கோலியுடன் களத்தில் மோதல், பாஜக எம்பி என அரசியல் அடையாளம் பல விமர்சனங்கள் இருந்தும், கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் மனிதாக கெளதம் கம்பீர் இன்றும் தொடர்வதற்கு ஒரே காரணம் அவரது நேர்மை மட்டுமே… நேர்மை கம்பீரின் அடையாளம்!