ககிசோ ரபடா 
விளையாட்டு

ககிசோ ரபடா : செம ஸ்பீடா, செம மாஸா, செம வேகமா... 300 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் 300 விக்கெட் வீழ்த்திய பெளலர் என்கிற உலக சாதனையைப் படைத்திருக்கிறார் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா.

Aiden

தென்னாப்பிரிக்கா - வங்கதேசத்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்தை 106 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது தென்னாப்பிரிக்கா. இதில் ரபடா 11 ஓவர்களை வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். வங்கதேசத்தின் சீனியர் பேட்ஸ்மேனான முஷ்ஃபிகர் ரஹ்மானின் விக்கெட்தான் ரபடாவின் 300-வது விக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ் 12,602 பந்துகளில் 300 விக்கெட்களை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது.

இந்தநிலையில் தற்போது ககிசோ ரபடா 11,817 பந்துகளில் 300 விக்கெட்களைப் பறித்து உலக சாதனைப்படைத்திருக்கிறார். வெறும் 29 வயதில் ரபடா இந்த சாதனையைப் படைத்திருப்பதோடு சராசரியாக 40 பந்துகளுக்கு ஒரு விக்கெட் எடுத்திருக்கிறார்.

குறைந்த பந்துகளில் 300 விக்கெட்கள் எடுத்தவர்கள் லிஸ்ட்டில் ரபடா, வக்கார் யூனுஸுக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் மூன்றாவது இடத்திலும், மற்றொரு தென்னாப்பிரிக்க பெளலர் ஆலன் டொனால்ட் நான்காவது இடத்திலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் மால்கம் மார்ஷல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

டாப் 5 பெளலர்களில் மூன்று பேர் தென்னாப்பிரிக்க வீரர்கள் என்பதோடு, அனைவருமே வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள் ரபடா!