INDvNZ 
விளையாட்டு

புனே டெஸ்ட் LIVE : 7 விக்கெட்களை அள்ளிய வாஷிங்டன் சுந்தர்... 259 ரன்களுக்கு நியூஸி ஆல் அவுட்! INDvNZ

பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்டில் மூன்று மாற்றங்களை செய்துள்ளது.

News Tremor Desk

இந்தியா 16/1

முதல் நாள் ஆட்ட முடிவில் ரோஹித் ஷர்மா மட்டும் அவுட் ஆக, இந்தியா 16 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருக்கிறது. ஜெய்ஸ்வாலும், கில்லும் களத்தில் உள்ளனர்.

வாஷிங்டன் சுந்தருக்கு 7 விக்கெட்!

ரவிச்சந்திரன் காலையில் 3 விக்கெட்கள் எடுக்க, அதன்பிறகு ரச்சின் ரவீந்திரா தொடங்கி மிட்செல் சான்ட்னர் வரை அடுத்த 7 விக்கெட்களையும் வீழ்த்தி நியூஸிலாந்தை 259 ரன்களுக்கு ஆல் அவுட் செய்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்.

9 விக்கெட்கள் காலி!

ஆறாவது விக்கெட்டாக அஜாஸ் பட்டேலின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, 252 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருக்கிறது நியூஸிலாந்து.

வாஷிங்டன் சுந்தர் ஃபைபர்!

வாஷிங்டன் சுந்தர் ஐந்தாவது விக்கெட்டாக டிம் சவுதியின் விக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார். நியூஸிலாந்து 242 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்திருக்கிறது.

வாஷிங்டன் சுந்தர் நான்கு!

அடுத்தடுத்து 4 விக்கெட்களை எடுத்து அசத்தியிருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். கிளென் ஃபிலிப்ஸ் 9 ரன்களுக்கு அவுட். தற்போது டிம் சவுதி களமிறங்க நியூஸிலாந்துன் 236 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருக்கிறது.

ஆறாவது விக்கெட்டை இழந்த நியூஸிலாந்து!

மதிய உணவுக்கு முன்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்களை எடுத்த நிலையில் தற்போது வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களை எடுத்திருக்கிறார். இருவருமே ஆஃப் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து 204 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருக்கிறது!

அசத்தல் வாஷிங்டன்!

ரச்சினுக்கு அடுத்து களமிறங்கிய டாம் பிளண்டிலையும் அதேப்போல கிளீன் போல்டாக்கி வெளியேற்றியிருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். நியூஸிலாந்து 201 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருக்கிறது.

ரச்சின் அவுட்!

வாஷிங்டன் சுந்தரின் அற்புதமான சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்திருக்கிறார் ரச்சின் ரவீந்திரா. 65 ரன்களில் ரச்சின் வெளியேற, தற்போது டாம் பிளண்டல் களமிறங்கியிருக்கிறார்.

ரச்சின் ரவீந்திரா 50*

நியூஸிலாந்தின் இளம் கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா அரை சதத்தைக் கடந்திருக்கிறார். பெங்களூர் டெஸ்ட்டில் சதம் அடித்திருந்த ரச்சின் தற்போது 55 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நிற்கிறார். அவருடன் டேரில் மிட்செல் 14 ரன்களுடன் இருக்கிறார். தற்போது நியூஸிலாந்து 185 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருக்கிறது. இந்தியாவின் சார்பில் அஷ்வின் மூன்று விக்கெட்களையும் கைப்பற்றியிருக்கிறார்.

அஷ்வினுக்கு மூணு!

ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று தனது மூன்றாவது விக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார். நியூஸிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டேவன் கான்வேவை 76 ரன்களில் வீழ்த்தியிருக்கிறார் அஷ்வின். தற்போது டேரில் மிட்செல் களமிறங்கியிருக்கிறார்!

அச்சுறுத்தும் டேவன் கான்வே!

பெங்களூரு டெஸ்ட்டில் சிறப்பாக ஆடிய டேவன் கான்வே - ரச்சின் ரவீந்திரா ஜோடி நிலைத்து நின்று ஆடிவருகிறது. ரோஹித் ஷர்மா தொடர்ந்து பெளலர்களை மாற்றி முயற்சித்தும் விக்கெட் விழவில்லை. நியூஸிலாந்து தற்போது 114/2 என ஆடிவருகிறது.

நியூஸிலாந்து 92/2

மதிய உணவு இடைவேளையில் 92 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருக்கிறது நியூஸிலாந்து. ரவிச்சந்திரன் அஷ்வின் லாதம், யங் என நியூஸிலாந்தின் இரண்டு பேட்ஸ்மேன்களையும் ஆட்டமிழக்கச்செய்திருக்கிறார்.

வில்லியம் யங் அவுட்!

நியூஸிலாந்து தனது 2-வது விக்கெட்டை இழந்திருக்கிறது. 18 ரன்களில் அவுட் ஆகியிருக்கிறார் வில்லியம் யங். இவரின் விக்கெட்டையும் அஷ்வினே எடுக்க, நியூஸிலாந்து 76 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருக்கிறது.

டாம் லாதம் அவுட்!

நியூஸிலாந்து கேப்டன் டாம் லாதமின் விக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். நேராக அஷ்வின் லைனில் வீசிய பந்தை லாதம் கால்களால் தடுக்க, எல்பிடபிள்யு முறையில் அவுட். 32 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்திருக்கிறது நியூஸிலாந்து. வில்லியம் யங் களம் இறங்கியிருக்கிறார்.

கவனமாக பேட்டிங் ஆடும் நியூஸிலாந்து!

நியூஸிலாந்தின் ஓப்பனர்கள் டாம் லாதமும், டேவன் கான்வேயும் மிகவும் கவனமாக இந்திய பெளலர்களை எதிர்கொண்டு விளையாடிவருகிறார்கள். 7 ஓவர்கள் முடிந்திருக்கும் நிலையில் நியூஸிலாந்து விக்கெட் இழக்காமல் 30 ரன்களுக்கு விளையாடிவருகிறது. பும்ராவும், ஆகாஷ் தீப்பும் பந்துவீசிவருகிறார்கள்.

நியூஸிலாந்து முதல் பேட்டிங்!

INDvNZ

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கைத் தேர்வு செய்திருக்கிறார். ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் என கருதப்படும் புனே பிட்ச்சில் இந்திய அணி மூன்று மாற்றங்களை செய்திருக்கிறது. எதிர்பார்த்ததுபோலவே கே.எல்.ராகுல் ப்ளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதேப்போல் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பதிலாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.