மேற்கு இந்தியத்தீவுகளில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் நேற்றிரவு அமெரிக்காவை வீழ்த்தி வெற்றியோடு கணக்கதைத் தொடங்கியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. USAvSA போட்டியின் 10 முக்கிய தருணங்கள் இங்கே!
தென்னாப்பிரிக்காவும், அமெரிக்காவும் மோதிய நார்த் சவுண்ட் மைதானம் பெளலர்களுக்கு சாதகமான பிட்ச், லோ ஸ்கோரிங் போட்டிக்குத் தயாராகுங்கள் என பிட்ச் ரிப்போர்ட் சொல்லப்பட, டாஸை வென்ற அமெரிக்கா கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்த உலக்கோப்பையிலேயே மீண்டும் ஒருமுறை பிட்ச் ரிப்போர்ட்கள் தவறாக சொல்லப்பட்டுவதற்கான உதாரணமாக அமைந்தது தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவின் பேட்டிங்!
கடந்த மாதம் நடந்த ஐபிஎல் போட்டிகளில் எல்லாம் ஃபார்ம் அவுட்டில் இருந்த குவின்டன் டி காக் நேற்று ஓப்பனிங்கிலேயே அமெரிக்க பெளலர்களை ஒப்பாரி பாடவைத்தார். ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மூன்றாவது ஓவரிலேயே அவுட் ஆனாலும், குவின்டன் கொஞ்சமும் கலங்கவில்லை. ஐஸ்தீப் சிங்கின் நான்காவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் டிகாக். நான்கு ஓவர்களில் 45 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா
டிகாக் ஒரு பக்கம் அதிரடி ஆட்டம் ஆட, இன்னொருபக்கம் தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், நிதானமாக ஆடினார். இந்த பார்ட்னர்ஷிப் கிட்டத்தட்ட 10 ஓவர்கள் நீடித்ததோடு, 58 பந்துகளில் 110 ரன்கள் குவித்தது. குவின்டன் டி காக் 40 பந்துகளில் 74 ரன்கள் அடித்து ஹர்மீத் சிங் பந்தில் அவுட் ஆனார்.
கேப்டன் மார்க்ரம் 32 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அவுட் ஆக, ஹென்ரிச் கிளாசன் 22 பந்துகளில் 36 ரன்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 16 பந்துகளில் 20 ரன்களும் அடித்து இறுதிவரை களத்தில் நின்றனர். தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.
வேகப்பந்து வீச்சாளரான சவுரப் நேத்ரவால்கர் பெளலிங்கில் அமெரிக்காவுக்கு கைகொடுத்தார். 4 ஓவர்கள் வீசி வெறும் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் நேத்ரவால்கர். இவரோடு ஹர்மீத் சிங்கும் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல்முறையாக உலகக்கோப்பை போட்டியில் ஆடும் பதட்டமோ, வெற்றிக்கு 195 ரன்கள் குவிக்கவேண்டுமே என்கிற அச்சமோ இல்லாமல் தாங்கள் திட்டமிட்டபடி விளையாட ஆரம்பித்தார்கள் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ஸ்டீவன் டெய்லரும், ஆண்ட்ரீஸ் கெளசும். இருவருமே தென்னாப்பிரிக்க பெளலர்களைக் கண்டு பயப்படவில்லை. முதல் 3.2 ஓவர்களில் 33 ரன்கள் குவித்தது அமெரிக்கா.
நான்காவது ஓவரை வீசிய கெகிசோ ரபாடா தென்னாப்பிரிக்காவுக்கான முதல் சந்தோஷ தருணத்தைக்கொடுத்தார். ஸ்டீவன் டெய்லர் நான்காவது ஓவரில் 14 பந்களில் 24 ரன்கள் அடித்து நல்ல அடித்தளம் அமைத்துத்தந்தாலும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். ரபாடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த டி20 உலகக்கோப்பையில் சிறிய அணிகள் எல்லாம் போட்டியே இன்று வீழ்ந்துகொண்டிருந்த நிலையில் அமெரிக்காவின் ஆண்ட்ரீஸ் கெளஸ் வெற்றிக்காக தனியாகப் போராடிக்கொண்டிருந்தார். ஓப்பனிங் இறங்கிய ஆண்ட்ரீஸ், 6-வது விக்கெட்டுக்கு விளையாடவந்த பெளலரான ஹர்மீத் சிங்குடன் சேந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப்போட்டார். இருவரும் சேர்ந்து 42 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்திருந்தனர்.
தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் தொடர்ந்து பெளலிங்கை ரோட்டேட் செய்துகொண்டே இருந்து, 18வது ஓவரில் ஹர்மீத் சிங் - கவுஸ் பார்ட்னர்ஷிப்பை உடைக்க, தென்னாப்பிரிக்காவின் வெற்றி உறுதியானது. ஆண்ட்ரிஸ் கவுஸ் இறுதிவரை அவுட் ஆகாமல் 47 பந்துகளில் 80 ரன்கள் அடித்து அமெரிக்காவுக்கு ஒரு போராட்டமான இன்னிங்ஸை ஆடினார்.
இதுவரை இந்த டி20 உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்காத தென்னாப்பிரிக்கா அடுத்து இங்கிலாந்துடன் மோத இருக்கிறது. இங்கிலாந்து - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி நாளை இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது.