டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கடந்த போட்டிகளில் விளையாடிய அதே அணியுடன் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் களமிறங்கியுள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் வகுத்த அதே வியூகத்தை வங்கதேசத்துக்கு எதிராகவும் செயல்படுத்திவருகிறார்கள் ஆப்கானிஸ்தான் ஓப்பனர்கள். பவர்ப்ளே ஓவர்களில் அடித்து ஆடாமல் நிதானமாக விக்கெட் இழக்காமல் ஆடுகிறார்கள். 6 ஓவர்கள் முடிவில் 27 ரன்கள் எடுத்திருக்கிறது ஆப்கானிஸ்தான். குர்பாஸும், ஸத்ரானும் களத்தில் இருக்கிறார்கள்!
11வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்திருக்கிறது ஆப்கானிஸ்தான். 29 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷத் ஹுசேனின் சுழற்பந்துவீச்சில் ஸத்ரான் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து அவுட்!
15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 80 ரன்கள் அடித்துள்ளது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தானின் அதிரடி பேட்ஸ்மேனான குர்பாஸும், ஆல்ரவுண்டரான் அஸ்மத்துல்லா ஓவர்சாயும் களத்தில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி டெத் ஓவர்களில் ரன்களை சேர்க்க முடியாமல் திணறுகிறது. 5 விக்கெட்டுகளை இழந்து 19வது ஓவரில்தான் 100 ரன்களைக் கடந்திருக்கிறது.
20 ஓவர்களின் முடிவில் 115 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறது ஆப்கானிஸ்தான். டஸ்கின் அஹமதுவின் கடைசி ஓவரின் முதல் பந்திலும், கடைசிப்பந்திலும் கேப்டன் ரஷீத் கான் சிக்ஸர்கள் அடித்து 115 ரன்களுக்கு கொண்டுவந்து சேர்த்தார். முன்னதாக குர்பாஸ் 55 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்ததுதான் ஆப்கானிஸ்தானின் அதிகபட்ச தனி நபர் ஸ்கோர்.
வங்கதேச ஓப்பனிங் பேட்ஸ்மேன் டன்ஸிட் ஹசனின் விக்கெட்டை வீழ்த்தினார் ஃபசல்ஹக் ஃபரூக்கி. டக் அவுட் ஆகி வெளியேறினார் ஹசன். 2 ஓவர்களின் முடிவில் 18 ரன்கள் அடித்திருக்கிறது வங்கதேசம். வெற்றிக்கு 108 பந்துகளில் 98 ரன்கள் அடிக்கவேண்டும்.
116 ரன் இலக்கை அடிக்க தடுமாறிக்கொண்டிருக்கிறது வங்கதேசம். ஆப்கானிஸ்தான் பெளலர்கள் சிறப்பாகப் பந்துவீசி 3 ஓவர்களில் 3 விக்கெட்டைப் பறித்திருக்கிறார்கள். வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன், கேப்டன் ஷான்ட்டோ ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கினார் நவீன் உல் ஹக். தற்போது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!
ஆப்கானிஸ்தான் வங்கதேசப் போட்டிக்கு இடையிடையே குறுக்கிடும் மழை இப்போது நின்றுவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் போட்டி மீண்டும் தொடங்கயிருக்கிறது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை!
இரண்டாம் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து - இந்தியா அணிகள் ஜூன் 27-ம் தேதி மோத இருக்கும் நிலையில் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதப்போவது யார் என்கிற கேள்விக்கு இன்றயப் போட்டியில் விடை கிடைத்துவிடும். ஆப்கானிஸ்தான் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதும்.
பவர்ப்ளே ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் அடித்திருக்கிறது வங்கதேசம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் 25 பந்துகளில் 20 ரன்களுடனும், சவுமியா சர்க்கார் 8 பந்துகளில் 10 ரன்களுடனும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
லிட்டன் தாஸ் - செளமியா சர்க்கார் பார்ட்னர்ஷிப்பை உடைத்திருக்கிறார் கேப்டன் ரஷீத் கான். லெக் சைடில் இருந்து வந்த பந்து சரியாகச்சுழன்று மிடில் ஸ்டம்ப்பைத் தாக்க க்ளீன் போல்டானார் சர்க்கார்.
பதட்டத்தில் ஃபீல்டிங்கில் தவறிழைத்துவருகிறது ஆப்கானிஸ்தான். முகமது நபி வீசிய ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தது ஆப்கானிஸ்தான்.
நபியின் ஓவரில் பவுண்டிரிகளை அடித்து பயமுறித்திக்கொண்டிருந்த ஹிரிதாயை அவுட் ஆக்கியிருக்கிறார் ரஷீத் கான். 64 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்திருக்கிறது வங்கதேசம். ஹிருதாயின் விக்கெட் ரஷீத்கானின் 150-வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 77 ரன்கள் அடித்திறது. இன்னும் 60 பந்துகளில் 39 ரன்கள் அடித்தால்போதும் என்கிற சூழலில் வெற்றிக்காக கடுமையாகப் போராடிவருகிறது ஆப்கானிஸ்தான்.
இன்னும் 2 ஓவர்களில் 36 ரன்கள் அடித்தால் வங்கதேசம் அரையிறுதிக்குத் தகுதிபெறும் என்கிற சூழலில் பவுண்டரிகள் அடிக்கத் திணறிவருகிறது வங்கதேசம்!
அடுத்தடுத்தப் பந்துகளில் முகமதுல்லா, ரிஷத் ஹுசேனின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானை வெற்றியை நோக்கி அழைத்துசெல்கிறார் கேப்டன் ரஷீத் கான். 3 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார் ரஷீத் கான்.
டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 164 விக்கெட்டுகளோடு முதலிடத்தில் இருக்க, ரஷீத் கான் 151 விக்கெட்டுகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
மழையின் குறுக்கீடுகள் காரணமாக 19 ஓவரில் 114 ரன்கள் எடுக்கவேண்டும் என டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் 40 ரன்களோடு களத்தில் நிற்க, 12.3 ஓவர்களில் 86 ரன்கள் அடித்திருக்கிறது வங்கதேசம்.
ஆப்கானிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி. ஜூன் 27 நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் அரையிறுதிப்போட்டியில் விளையாடுகிறது ஆப்கானிஸ்தான். நவீன் உல்ஹக், கேப்டன் ரஷீத்கான் இருவருமே தலா 4 விக்கெட்கள் வீழ்த்தி வங்கதேசத்தை 105 ரன்களுக்குள் முடக்கினர். வங்கதேச ஓப்பனிங் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் 50 ரன்கள் அடித்து கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.