SAvAFG 
டி20 உலகக்கோப்பை

சோக்கர்ஸ் எனும் அவமானத்தை தென்னாப்பிரிக்கா துடைக்குமா, ஆப்கானிஸ்தானின் எழுச்சி என்னவாகும்? SAvAFG

நாளை அதிகாலை இந்திய நேரப்படி 6 மணிக்கு ஆப்கானிஸ்தானும், தென்னாப்பிரிக்காவும் 2024 டி உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப்போட்டியில் மோதப்போகின்றன. இரண்டு அணிகளுமே இதுவரை ஐசிசி உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை எட்டிய வரலாறு இல்லை. வெற்றிக்கான தகுதி யாருக்கு அதிகம் இருக்கிறது?

Aiden

ஆப்கானிஸ்தானின் எழுச்சிப் பயணம்!

ஆப்கானிஸ்தான் 2004 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருகிறது. சரியாக 20 ஆண்டுகாலப் பயணத்தில் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனைப்படைத்துள்ளது ஆப்கான். உள்ளூர் திறமைசாலிகளை சரியாக அடையாளம் கண்டு, அவர்களின் திறன்களை மெருகேற்ற ஐபிஎல் தொடங்கி, பிக்பேஷ், டி20 பிளாஸ்ட் என உலகின் எல்லா மூலைகளிலும் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாடவைத்து, இளம் வீரர்களை சர்வதேச அளவில் விளையாடக்கூடியவர்களாக தயார்படுத்தி சாதித்துக் காட்டியுள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம். 

தென்னாப்பிரிக்காவின் திருப்புமுனை!

தென்னாப்பிரிக்கா 1992 உலகக்கோப்பை முதல் சோதனைகளால் சோக்கர்ஸ் என்கிற அவமானத்துக்குள்ளாகி வருகிறது. ஒவ்வொருமுறையும் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக, நம்பர் 1 அணியாக உலகக்கோப்பைக்குள் நுழையும் தென்னாப்பிரிக்கா. லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றுபெறுவார்கள். ஆனால், நாக் அவுட் போட்டிகளில் நாக் அவுட் ஆகிவிடுவார்கள் என்பதே வரலாறு. இந்தமுறை அது நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது தென்னாப்பிரிக்கா. 2024 டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

ரஷீத் கான்

ஆப்கானிஸ்தானின் முக்கிய வீரர்கள்!

  1. ரஷீத் கான்: ஆப்கானிஸ்தானின் கேப்டன் மற்றும் முன்னணி வலது கை சுழற்பந்து வீச்சாளர். ஓரே ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர். கரீபியன் மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் ரஷீத் கான் செம ஹேப்பி அண்ணாச்சி!

  2. நூர் அஹ்மத்: ரஷீத்தின் இடது கை வெர்ஷன். இடதுகை லெக் ஸ்பின்னரான நூர் அஹ்மத் வலுவான பார்ட்னர்ஷிப்களை உடைக்கக்கூடியவர்.

  3. ரஹ்மானுல்லா குர்பாஸ்: ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரரான குர்பாஸ் கடந்த சில போட்டிகளாக அடக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். இந்த உலகக் கோப்பையின் லீடிங் ரன் ஸ்கோரர் இவர்தான். இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 281 ரன்கள் அடித்துள்ளார். ஆனால், ஃபிட்னஸ் காரணமாக அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

  4. ஃபசல்ஹக் ஃபரூக்கி : வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர். ட்ரென்ட் போல்ட் ஜூனியர் போல விலகாத லைன் அண்ட் லெங்க்த்தில் துல்லியமாகப் பந்து வீசிவருகிறார்.

  5. நவீன்-உல்-ஹக்: பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் பல வேரியஷன்களை தன்னிடத்தே வைத்திருக்கிறார். 

தென்னாப்பிரிக்காவின் முக்கிய வீரர்கள்!

  1. கேஷவ் மகராஜ் : இடது கை சுழற்பந்து வீச்சாளர். குர்பாஸ், ஸத்ரான், ஓமர்சாய், குல்பதீன், நபி என வரிசையாக வலது கை பேட்ஸ்மேன்களாகவே இருக்கும் ஆப்கானிஸ்தானின் பேட்டிங் ஆர்டருக்கு சிக்கலை உண்டு பண்ணக்கூடியவர்.

  2. தப்ரைஸ் ஷம்சி : இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர். கரீபியன் டி20 லீக்களில் விளையாடி அதிக அனுபவம் கொண்டிருப்பவர் என்பதால் இந்த உலகக்கோப்பையில்  விளையாடும் எல்லா போட்டிகளிலும் மேட்ச் வின்னராக விக்கெட்களை சாய்க்கிறார் ஷம்சி.

  3. ஹென்ரிச் கிளாசென்: ஆப்கானிஸ்தானின் சுழல் அட்டாக்கை எதிர்க்ககூடிய பேட்ஸ்மேன். திடீரென களமிறங்கி 20 பந்துகளில் 50 ரன்கள் அடிக்கக்கூடிய ஸ்ட்ரைக்கிங் மிடில் ஆர்டர் பேட்டர்.

  4. டேவிட் மில்லர் : அனுபவம் வாய்ந்த ஃபினிஷர். மளமளவென தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள் சாய்ந்தால், சரிவைத் தடுத்து அணியைத் தூணாகத் தாங்கிப்பிடிக்கக் கூடியவர். 

ஆபத்து ஆப்கானிஸ்தானுக்கே!

ஆப்கானிஸ்கான்

  • பெளலிங் பலம் : இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சாளர்கள் மட்டுமே 57 விக்கெட்களை சாய்த்துள்ளனர்.

  • பேட்டிங் துயரம் : குர்பாஸ், ஸத்ரான் என ஓப்பனர்களைத்தாண்டி வந்தால் பவர்ஃபுல்லான, ரன்களை விரைந்து சேர்க்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் ஆப்கானிஸ்தான் பேட்டிங் ஆர்டரில் இல்லை. மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசம்.

  • அதிர்ச்சி : குர்பாஸின் ஃபிட்னஸ் கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் விளையாடத் தகுதியில்லாத பட்சத்தில், ஹஸ்ரதுல்லா ஸசாய் கீப்பராக களமிறங்கலாம்.

கேஷவ் மஹாராஜ்

சோக்கர்ஸ் என்ற அவமானத்தை துடைக்குமா தென்னாப்பிரிக்கா?

  • மார்க்ரம் முடிவு: டாஸ் வென்றால் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான் அவர்கள் முதலில் அடிக்கும் ரன்களுக்கு ஏற்ப, ஆப்கானிஸ்தான் பேட்டர்களை  தங்களின் பந்துவீச்சால் சுருட்டமுடியும்.   

  • இடது கை ஸ்பின் ட்வின்: பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பது மட்டுமல்லா, மஹாராஜ் மற்றும் ஷம்சி இருவருமே இடது கை ஸ்பின்னர்களாக இருப்பது தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய பலம். இருவருமே நாளை ஆட்ட நாயகர்களாக இருப்பார்கள்.

  • பவர்ஃபுல் மிடில் ஆர்டர் :  மார்க்ரம், ஸ்டப்ஸ் மற்றும் கிளாசென் என திறமையான அனுபவமிக்க வீரர்கள் மிடில் ஆர்டரில் இருப்பதால், ஆப்கானிஸ்தானின் ஸ்பின்னர்களை பெரிய சிக்கல் இல்லாமல் சமாளிக்க முடியும்.

ஆப்கானிஸ்தானுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் அவர்கள் பெரிய பிரஷர் இல்லாமல் நாளை விளையாடுவார்கள். பலமான அணியாக தென்னாப்பிரிக்கா இருந்தாலும் ப்ரஷரான போட்டிகளில் தென்னாப்பிரிக்கா இதுவரை சொதப்பியே இருக்கிறது. அதனால் நாளைய போட்டியில் சர்ப்ரைஸ்களுக்குப் பஞ்சம் இருக்காது!

ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையிலான அரையிறுதிப் போட்டியின் லைவ் கவரேஜ் நாளை காலை 5.30 மணி முதல். NewsTremor உடன் இணைந்திருங்கள்.