டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். விக்கெட் இழக்காமல் பவர்ப்ளே ஓவர்களைக் கடப்பதுதான் ஆப்கானிஸ்தானின் வியூகம். ஆனால் முதல் ஓவரை வீசிய மார்க்கோ ஜேன்சன், குர்பாஸை ஆறாவது பந்தில் அவுட் ஆக்கினார். 2 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 10 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.
20 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்துவிட்டது ஆப்கானிஸ்தான். மார்க்கோ ஜேன்சன் குர்பாஸ், குல்பதீன் விக்கெட்டுகளை வீழ்த்த, ககிசோ ரபாடா இப்ராஹிம் ஸத்ரானை அவுட் ஆக்கினார்.
ஆப்கானிஸ்தானின் அனுபவமிக்க முகமது நபி ககிசோ ரபாடா பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் 21 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துவிட்டது. இன்னும் ஒரு பேட்ஸ்மேன்கூட டபுள் டிஜிட் ரன்களைத் தாண்டவில்லை. தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளைப் பறித்து விக்கெட் மெய்டன் ஓவர் வீசினார் ககிசோ ரபாடா!
5 ஓவர்களுக்குள்ளாகவே மார்க்கோ ஜேன்சன் 3 விக்கெட்டுகளைப் பறித்துவிட்டார். பவர்ப்ளே ஓவர்களுக்குள்ளாகவே 5 விக்கெட்களை இழந்துவிட்டது ஆப்கானிஸ்தான்!
ஸ்பின் ட்ராக்கில் வெறும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே முதல் 6 விக்கெட்டுகளையும் தூக்கிவிட்டது தென்னாப்பிரிக்கா. முதல் பேட்ஸ்மேனாக டபுள் டிஜிட் ரன்களைத் தொட்டர் ஓமர்சாய் 10 ரன்களில் நோர்க்கியாவின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
களத்தில் கேப்டன் ரஷீத் கான் இருக்கிறார். இன்று பேட்டிங்கிலும் தன்னுடைய அணியைக் காப்பாற்றியாக வேண்டிய நெருக்கடியில் ஆடி வருகிறார் ரஷீத் கான். ஆல் ரவுண்டரான கரீம் ஜனத் உடன் இருக்கிறார்.
6 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் 10வது ஓவரில் 50 ரன்களைத் தொட்டது. இடது கை ஸ்பின்னரான தப்ரிஸ் ஷம்ஸி எல்பிடபிள்யூ முறையில் ஜனாத்தை அவுட் ஆக்கினார்.
50 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துவிட்டது ஆப்கானிஸ்தான். தப்ரிஸ் ஷம்ஸை தனது முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து எல்பிடள்யூ முறையில் ஜனாத், நூர் அஹமதின் விக்கெட்களை வீழ்த்தினார்!
நோர்க்கியாவின் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார் ரஷீத் கான். 51 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்துவிட்டது ஆப்கானிஸ்தான். நோர்க்கியா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் மிகவும் குறைவான ரன்களாக 56 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆகியிருக்கிறது ஆப்கானிஸ்தான். தென்னாப்பிரிக்காவின் தப்ரிஸ் ஷம்ஸி ஆப்கானிஸ்தானின் கடைசி விக்கெட்டையும் எல்பிடள்யூ முறையில் அவுட் ஆக்கினார்.
ஆப்கானிஸ்தான் ஸ்கோர்ட்போர்டில் 9 பேர் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆக, ஓமர்சாய் மட்டுமே 10 ரன்கள் அடித்து டபுள் டிஜிட் தொட்டவர். மார்க்கோ ஜேன்சன், தப்ரிஸ் ஷம்ஸி இருவரும் தலா 3 விக்கெட்கள் வீழ்த்த, ரபாடா, நோர்க்கியா இருவரும் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
முதல்முறையாக நாக் அவுட் போட்டிகளில் ஆடுவதாலோ என்னவோ அழுத்தத்தில் கோட்டைவிட்டுவிட்டார்கள் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள். கேஷவ் மஹாராஜின் ஓவரைத்தவிர மற்ற எல்லா ஓவர்களிலும் ஆப்கானிஸ்தான் விக்கெட்களை இழந்தது. மார்க்கோ ஜான்சன் குர்பாஸை வீழ்த்தி விக்கெட் சரிவை தொடங்கிவைக்க அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியனில் இருந்து வருவதும் போவதுமாக இருந்தார்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.
ஓப்பனர் டிகாக்கின் விக்கெட்டை ஃபசல்ஹக் ஃபரூக்கி வீழ்த்த 9 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்து 57 ரன்களை சேஸ் செய்து வருகிறது தென்னாப்பிரிக்கா. களத்தில் ரீஸா ஹெண்ரிக்ஸும், ஏய்டன் மார்க்ரமும் களத்தில் இருக்கிறார்கள்.
நவீன் உல்ஹக்கின் பந்துவீச்சில் எய்டன் மார்க்ரமின் பேட்டில் எட்ஜாகி கேட்ச் ஆனது. அம்பயர் அவுட் கொடுக்காமல் இருக்க, ஆப்கானிஸ்தானும் ரிவியூ கேட்கவில்லை.
5 ஓவர்களில் 26 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடிக்கொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்கா. வெற்றிக்கு 90 பந்துகளில் 31 ரன்கள் தேவை.
ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் முதல்முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற இருக்கிறது தென்னாப்பிரிக்கா. சோக்கர்ஸ் என அழைக்கப்பட்டு வந்த அவமானத்தை இன்றோடு துடைக்க இருக்கிறது தென்னாப்பிரிக்கா.
ஆப்கானிஸ்தானின் 56 ரன்கள் டார்க்கெட்டை 9 ஓவர்களுக்குள்ளாக அடித்துமுடித்தது தென்னாப்பிரிக்கா. கேப்டன் எய்டன் மார்க்ரம் 23 ரன்களுடனும், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 29 ரன்களுடனும் களத்தில் நின்று ஆட்டத்தை முடித்தனர்!
இந்த டி20 உலகக்கோப்பையில் தோல்வியையே சந்திக்காத அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. இன்று இரவு இங்கிலாந்து Vs இந்தியா போட்டியில் வெல்லும் அணியுடன் இறுதிப்போட்டியில் வரும் சனிக்கிழமை (29-06-2024) இரவு மோத இருக்கிறது தென்னாப்பிரிக்கா!