ராகுல் டிராவிட் SAvIND 
டி20 உலகக்கோப்பை

பாண்டியாவுக்கு பதில் அக்ஸர், க்ளாசனை வீழ்த்த போட்ட நாடகம்… ரோஹித் & ராகுலின் பஞ்ச தந்திரம்! SAvIND

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ளது இந்தியா. ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெறும் சூழல் உருவான நிலையில் இந்தியா கோப்பையை வென்றது எப்படி?!

Aiden

கோலியின் 76, பும்ராவின் டெத் ஓவர் பெளலிங், சூர்யகுமாரின் பவுண்டரி லைன் கேட்ச் என இந்தியா வெற்றிபெற இந்த மூன்று முக்கிய காரணங்கள் இருந்தாலும் இதைவிட முக்கியமாக இருந்தது இந்தப்போட்டியில் வெல்ல கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அமைத்த வியூகங்களும், தந்திரங்களும்தான்!

டாஸ் எனும் முதல் தந்திரம்!

SAvIND

அது எப்படியோ தெரியாது... முக்கியமான போட்டிகளில் எல்லாம் ரோஹித் சரியாக டாஸை வென்றுவிடுவார். ஐபிஎல், சர்வதேச போட்டிகள் என எல்லாவற்றிலும் இந்த ரோஹித் ராசியைப் பார்க்கலாம். தங்களுடைய பலம் பெளலிங் என்பதால் முதலில் பேட்டிங் செய்து எவ்வளவு ரன்கள் சேர்க்கமுடியுமோ சேர்த்து அதை டிஃபெண்ட் செய்யலாம் என்பதுதான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மாவின் முதல் தந்திரமாக இருந்தது. அதன்படி டாஸ் வென்றதுமே ஃபர்ஸ்ட் பேட்டிங் என சொல்லிவிட்டார் ரோஹித்.

அக்சர் பட்டேலின் சர்ப்ரைஸ் தந்திரம்!

SAvIND

ரோஹித் ஷர்மா, ரிஷப் பன்ட், சூர்யகுமார் யாதவ் என இந்தியாவின் மிக முக்கியமான மூன்று பேட்ஸ்மேன்கள் அவுட் ஆக, அடுத்து பிட்ச்சுக்கு ஆடவரவேண்டியவர் ஹர்திக் பாண்டியா. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் பாண்டியா, ஜடேஜா, ஷிவம் துபே பின்னர்தான் அக்ஸர் பட்டேல் என பேட்டிங் ஆர்டரை வைத்திருந்தது இந்தியா. ஆனால், அரையிறுதிப்போட்டியில் 8-வது இடத்தில் இறக்கப்பட்ட அக்ஸர் இறுதிப்போட்டியில் 5-வது பேட்ஸ்மேனாக களமிறக்கியதுதான் தென்னாப்பிரிக்க பெளலர்களுக்கு இந்தியா கொடுத்த சர்ப்ரைஸ். இந்த பேட்டிங் வரிசை மாற்றம் இந்தியாவுக்கு வொர்க் அவுட் ஆனது. கோலியோடு சேர்ந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 47 ரன்கள் அடித்து இந்தியா நல்ல ஸ்கோரை எட்ட வழிவகுத்துவிட்டுப்போனார் அக்ஸர் பட்டேல்.

டிகாக்குக்கு 'Fineleg' தந்திரம்!

SAvIND

தென்னாப்பிரிக்கா முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் டிகாக் களத்தில் உறுதியாக நிற்க, தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் போர்டு உயர ஆரம்பித்தது. டிகாக்கின் விக்கெட் கட்டாயம் தேவை என்கிற கட்டத்தில் ரோஹித் ஷர்மா செய்த ஃபீல்டிங் மாற்றம் சரியாகக் கைகொடுத்தது. 13-வது ஓவரில் அர்ஷ்தீப்போட்ட பேக் ஆஃப் தி லென்த் பாலை ஃபைன் லெக் திசையில் பவுண்டரியாக மாற்றினார் குவின்டன் டி காக். ஃபீல்டர் யாரும் இல்லாததால் கேட்ச் ஆகவேண்டிய இந்த ஷாட் பவுண்டரி ஆனது. உடனே அடுத்தப்பந்தை அப்படியே போடவைத்து ஃபைன் லெக்கில் ஃபீல்டராக குல்தீப்பை நிறுத்தினார் ரோஹித் ஷர்மா. அங்கே ஃபீல்டர் இருப்பதையே கவனிக்காத டிகாக் கேட்ச் கொடுத்து அவுட்டானார். க்ளாஸன் & குவின்டன் என பயமுறுத்திக்கொண்டிருந்த இந்தக் கூட்டணியைப் பிரிக்க காரணமாக இருந்தது இந்த ஃபீல்டிங் தந்திரமே!

க்ளாசனுக்கு ‘இன்டர்வெல்' தந்திரம்!

SAvIND

அக்சர் பட்டேலின் ஒரே ஓவரில் 24 ரன்கள் அடித்து நொறுக்கிவிட்டார் ஹென்ட்ரிக் க்ளாசன். கிட்டத்தட்ட ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் பக்கம் போய்விட்டது. உடனே அடுத்த ஓவரை தன்னுடைய ஆயுதாமான பும்ராவிடம் கொடுத்தார் ரோஹித். இந்த ஓவரில் அடித்து ஆடாமல், விக்கெட்டை இழக்காமல் கடந்துபோனார் க்ளாசன். 24 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே அடிக்கவேண்டும் என்கிற சூழலில் க்ளாசனின் கவனத்தை குலைக்க, திடீரென பன்ட்டுக்கு காயம் என்பதுபோன்ற ஒரு தந்திரத்தை அரங்கேற்றியது ராகுல் & ரோஹித் கூட்டணி. க்ளாசனின் ரிதம் காலியானது. பன்ட் பேடுகளை எல்லாம் மாற்றி ரெடியாகி ஆட்டம் ஆரம்பிக்கும்போது க்ளாசனின் கவனச்சிதறல் முதல் பந்திலேயே தெரிந்தது. தேவையில்லாத ஷாட் ஆடி க்ளாசன் அவுட் ஆக, பாண்டியாவுக்கு மிக முக்கியமான விக்கெட் கிடைத்தது.

பும்ரா எனும் பஞ்ச தந்திரம்!

19 அல்லது 20-வது ஓவர்தான் பும்ரா வீசுவார், அர்ஷதீப்தான் 18வது ஓவரை வீசுவார் என தென்னாப்பிரிக்க வீரர்கள் எதிர்பார்க்க, பும்ராவின் கடைசி ஓவரை 18வது ஓவரிலேயே முடித்துவிட்டார் ரோஹித். இந்த ஓவர்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. 18 பந்துகளில் 22 ரன்கள் தேவை மில்லர், ஜேன்சன் என நல்ல பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்கும்போது வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து ஜேன்சனின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார் பும்ரா.

உலகக்கோப்பைக்கு முன்பாகவே ஓய்வை அறிவித்துவிட்ட பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கடைசிப்போட்டியில் தன்னுடைய அத்தனை ராஜதந்திரங்களையும் நிகழ்த்திக்காட்டி கோப்பையைத் தூக்கியிருக்கிறார்!