SAvIND 
டி20 உலகக்கோப்பை

பும்ரா, ரோஹித் மிரட்டினாலும்… தென்னாப்பிரிக்கா பக்கம் சாய்கிறதா வெற்றி?! SAvIND

நாக் அவுட் போட்டிகளைப் பொருத்தவரை அன்றைய நாளில் யார் சிறப்பாக ஆடுகிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி, தோல்வி என்பது இரு அணிகளும் வகுக்கப்போகும் வியூகத்தில்தான் இருக்கிறது.

Aiden

ஐசிசி டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இன்று இந்தியாவும்,தென்னாப்பிரிக்காவும் சந்திக்கின்றன. இந்தியா மிக மிக வலுவான அணியோடு இந்த உலகக்கோப்பையில் களம் இறங்கியிருக்கிறது. மறுபக்கம் இதுவரை பலமான அணிகள் இருந்தபோதெல்லாம் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறாத தென்னாப்பிரிக்கா எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஒரு ஆவரேஜ் அணியுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா வைத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன?

ரோஹித் Vs கோலி

ரோஹித் ஷர்மா தன் இழந்த ஃபார்மையும், நம்பிக்கையையும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் மீட்டெடுத்துவிட்டது இந்திய அணிக்குப் பெரிய பலம். ஆனால், இதுவரை நாக் அவுட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா பெரிதாக ரன்கள் அடித்ததில்லை என்பதே வரலாறு. டி20 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை இதே தென்னாப்பிரிக்க அணியுடன் 2014-ல் இந்தியா அரையிறுதிப்போட்டியில் மோதியது. அந்த ஆட்டத்தில் 24 ரன்கள் அடித்தார் ரோஹித். 2016 உலககோப்பை அரையிறுதிப்போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 43 ரன்களும், 2022-ல் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 27 ரன்களும் அடித்ததுதான் ரோஹித்தின் பர்ஃபாமென்ஸ்.

ரோஹித்தின் பர்ஃபாமென்ஸோடு விராட் கோலியின் நாக் அவுட் போட்டிகளின் பர்ஃபாமென்ஸை ஒப்பிட்டால் அது சிறப்பாகவே இருக்கிறது. 2014 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அரையிறுதிப்போட்டியில் விராட் கோலி 72 ரன்களும், 2016 வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 89 ரன்களும், 2022 இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 50 ரன்களும் என விளையாடிய அத்தனை உலக்கோப்பையின் கடைசிகட்டப் போட்டிகளிலுமே அரைசதம் அடித்திருக்கிறார் விராட் கோலி. ஆனால், கடந்த மாதம் நடந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய விராட் கோலி, இந்த உலகக்கோப்பையில் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார். ஆனால், இறுதிப்போட்டியில் தனக்கிருக்கும் அனுபவத்தைக்கொண்டு அவர் ஆடினால் இன்று அற்புதங்கள் செய்வார் விராட் கோலி.

SAvIND

ரோஹித், விராட்டுக்கு அடுத்து ரிஷப் பன்ட்,சூர்யகுமார், ஹர்திக் என ஸ்ட்ராங்கான பேட்டிங் லைன் அப்பையே இந்தியா கொண்டிருக்கிறது. சூர்யகுமாரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்தியாவுக்கு பேட்டிங்கில் ஓப்பனர்கள் சிறப்பாக பர்பார்ஃம் செய்துவிட்டால் பெளலிங்கில் பிரச்சனை இல்லை. 

பட்டாசு பெளலிங் : ‘’பேரைக்கேட்டாலே நடுங்குதுல்ல’’ ஜஸ்பிரித் பும்ராவைப் பார்த்தாலே நடுங்குகிறார்கள் எதிரணி பேட்ஸ்மேன்கள். இப்போது கூடவே அர்ஷதீப்பும் ரன்கள் கொடுத்தாலும் சரியான இடைவெளிகளில் விக்கெட்டை பறிக்கும் யுக்தியை தெரிந்துவைத்திருப்பதால் வேகப்பந்து டிபார்ட்மெண்ட் செம ஃபார்மில் இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவும் மிடில் ஓவர்களில் சிறப்பான வேரியேஷன்கள் மூலம் ரன்களைக் கட்டுப்படுத்துகிறார். ஸ்பின்னர்களைப் பொருத்தவரை அக்ஸர் பட்டேல், குல்தீப், ஜடேஜா என அனுபவமிக்க பெளலர்களைக் கொண்டிருக்கிறது இந்தியா. அக்ஸரும், பட்டேலும் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் பேட்டிங் லைப்பை மொத்தமாக அடித்து நொறுக்கினார்கள். தென்னாப்பிரிக்காவும் ஸ்பின்னர்களை சந்திக்க தடுமாறுவதால் இன்று அக்சருக்கும், குல்தீப்புக்கும் செம வேட்டை இருக்கிறது. 

SAvIND

ஃபீல்டிங் மற்றும் பிரஷர் : ஆக்ரோஷமான பீல்டிங் மற்றும் துல்லியமான த்ரோக்கள் மூலம் ரன்-அவுட்கள் என தென்னாப்பிரிக்கா மீது இந்தியா பிரஷரை அதிகரிக்கமுடியும்.

SAvIND

இந்தியன் டீமுக்கு பிரச்சனையே இல்லையா?!

  1. டெத் பெளலிங்: பும்ராவே இருக்கும்போதிலும், டெத் ஓவர்களில் அதிக ரன்களைக் கொடுக்காமல் பந்துவீசுவதில் இந்தியா சவால்களை எதிர்கொள்ளக்கூடும். அர்ஷதீப்பும், பும்ராவும் அதிக ரன்களைக் கொடுத்தால் மற்ற பெளலர்களைவத்து ரோஹித் சமாளிக்கவேண்டியதிருக்கும்.

  2.  மிடில்-ஆர்டர் பர்ஃபாமென்ஸ்: ரோஹித், விராட், பன்ட், சூர்யா டாப் ஆர்டர் சொதப்பினால் ஹர்திக், ஜடேஜா, அக்ஸர் என ஆல்ரவுண்டர்கள் பேட்டிங் சரியாக விளையாடாமல் போனால் அது இந்தியாவுக்கு ஆபத்து.

தென் ஆப்பிரிக்காவின் வியூகம்:

1. ஆக்ரோஷமான ஸ்டார்ட்: குயின்டன் டி காக்கின் ஆக்ரோஷமான பேட்டிங்கால் தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே அடித்து ஆட முயற்சிக்கும். ஹெண்ட்ரிக்ஸும், டிகாக்கும் விக்கெட் இழக்காமல் பவர்ப்ளே ஓவர்களை ஆடினார்கள் என்றால் தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய ஸ்கோரை எட்டும்.

2. பெளலிங் டெக்னிக்ஸ்: ரோஹித், விராட், பன்ட், சூர்யகுமார் என இந்த நால்வரின் விக்கெட்டையும் தூக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தென்னாப்பிரிக்கா. அதனால் ஆரம்பதிலேயே ஜேன்சன், ரபாடா, நார்க்கியா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும் மாறி மாறி பயன்படுத்தும். ஷம்சி, மஹாராஜ் என ஸ்பின்னர்கள் இருந்தாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை சமாளித்துவிடுவார்கள் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களைத்தான் அதிகம் நம்பவார் கேப்டன் எய்டன் மார்க்ரம். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்துவார். 

SAvIND

3. ஃபீல்டிங் மற்றும் பிரஷர் : இந்தியாவைப் போலவே, தென்னாப்பிரிக்காவும் ரன்-அவுட் வாய்ப்புகளை உருவாக்கவும், இந்திய பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை உருவாக்கவும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படும்.

SAvIND
  • தென்னாப்பிரிக்காவின் பிரச்சனைகள்!

    1. மிடில்-ஆர்டர் நிலைத்தன்மை : ஹென்ரிக் க்ளாசன், டேவிட் மில்லர் என மிடில் ஆர்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும் இவர்கள் நிலையான ஆட்டத்தை இதுவரை ஆடவில்லை என்பது தென்னாப்பிரிக்காவின் கவலை நம்பர் 1.

    2. டெத் ஓவர் பிரஷர்: டெத் ஓவர்களின் போது ப்ரஷர் ஆகாமல் பந்துவீசினால் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்களின் ரன் தாக்குதலில் இருந்து தென்னாப்பிரிக்காவால் தப்பிக்க முடியும். 

வெற்றி யாருக்கு? இரு அணிகளுமே வலுவான பேட்டிங் மற்றும் பெளலிங் அட்டாக்கைக் கொண்டிருக்கிறது. பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களை யார் சரியாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும். பும்ராவின் பெளலிங்கும், கோலியின் பேட்டிங்கும் கைகொடுத்தால் இந்தியா இன்று வெல்லும் வாய்ப்பு அதிகம்!