பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இல்லாமல் நடைபெற இருக்கும் சீசன், விஜய் சேதுபதியின் முதல் சீசன் என்பதால் டிஆர்பி பிரஷரை சமாளிக்க வலுவான, மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்களை களமிறக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது விஜய் டிவி.
டிஆர்பி ரேட்டிங் வரவேண்டும் என்றால் சினிமா பிரபலங்களை நம்புவதைவிட தன்னுடைய டிவி பிரபலங்களையே அதிகம் நம்புவது என முடிவெடுத்திருக்கிறது விஜய் டிவி. அதனால்தான் டிவி சீரியல் நடிகர்கள், குக்கு வித் கோமாளி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சி பிரபலங்களை இந்தமுறை அதிக அளவில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது.
'செல்லம்மா' சீரியல் நடிகர்கள் அன்ஷிதா - அர்னவ், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருண், டிவி நடிகை செளந்தர்யா நஞ்சுண்டன், 'குக்கு வித் கோமாளி' புகழ் சுனிதா, விடிவி கணேஷ், ஆர்ஜே ஆனந்தி எனப் பலரையும் டிக் அடித்துவைத்திருக்கிறது விஜய் டிவி. இதில் மிக முக்கியமாக 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல் மூலம் மிகவும் புகழ்பெற்ற வினோத் பாபு - பவித்ரா ஜனனி இருவரையும் ஜோடியாக களமிறக்க திட்டமிட்டது விஜய் டிவி.
பவித்ரா ஜனனி ஓகே சொல்லிவிட, வினோத் பாபு மறுத்துவிட்டார். கடைசி வரை விஜய் டிவி அவரை எப்படியாவது பிக் பாஸ் சீசன் 8-க்குள் கொண்டுவர முயற்சித்தும் அது நடக்கவில்லை.
வினோத் பாபு கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகிறார். அந்தப் படத்துக்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கயிருப்பதால் வினோத் பாபு மறுத்துவிட்டார் எனத் தெரிகிறது!