பரபரப்பாக மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அனல் பரவ தொடங்கியிருக்கிறது. ரவீந்திரன், அர்னாவ் என ஆண்கள் மட்டுமே எலிமினேட் ஆகியிருக்கிறார்கள். இந்த வாரத்துக்கான எலிமினேஷன் யார், இந்த வாரம் இரண்டு டீமும் செய்த தவறுகள் என்னென்ன.. விசே செய்யப் போகும் சம்பவமென்ன? விரிவாகப் பார்க்கலாம். இது BB Tamil 08 Day 21
பெண்கள் டீமில் எனக்கு வாய்ப்பு தர மறுக்கிறார்கள் என்று பிராது கொடுத்திருந்தார் செளந்தர்யா. நண்பன் பட விஜய் மாதிரி ‘உனக்கு ஒரு சாம்பிள் காட்டுறேன்’ என்று பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்க்கில் மேனேஜராக இருந்த செளந்தர்யா ஒழுங்காக விளையாடவில்லை என்று புகார் கூறியிருந்தனர். அதைக் கூறி, ‘உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் போது ஏன் ஒழுங்கா பண்ண மாட்டேன்றீங்க.. வாய்ப்பை பயன்படுத்தி ஜெயிச்சி காட்டுனா தான் உங்களை நம்புவாங்க. மறுபடியும் வாய்ப்பு கிடைக்கும்’ என்று சவுண்டுக்கு சாஃப்டாக புத்தி சொன்னார் விஜய்சேதுபதி. இதை ஒரு ரெட் அலெர்ட்டாக எடுத்து, கேம் ப்ளானை செளந்தர்யா மாற்றிக் கொள்ள வேண்டும். நல்ல ஆட்டக்காரியாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறார் சவுண்ட்.
பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்க்கில் ஜாக்குலினை கிண்டல் செய்தார் செளந்தர்யா. அதற்கு ஜாக்குலின் கோபித்துக் கொண்டார். பின்னர், இருவரும் ஜோடி ஆகிவிட்டார்கள். இந்த விஷயத்தை நியாபகமாக வைத்து அதையும் சொல்லிக் காட்டினார் விசே. முட்டை போண்டா… அந்த போண்டா என்று யாரையும் யாரும் சொல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏன்னா.. ‘குழந்தைங்க வரைக்கும் இந்த ஷோவைப் பார்ப்பாங்க’ என்று விசே சொன்னது நல்ல ஸ்டேட்மென்ட். பாடி ஷேமிங் , கெட்ட வார்த்தைகளை ஊக்குவிக்காமல் உடனடியாக கண்டிக்கிறார் விசே. இதற்காகவே விசேவுக்கு க்ளாப்ஸ்.
சாச்சனா Vs ஜெஃப்ரி
அப்படியே… சாச்சனா & ஜெஃப்ரி பக்கம் திருப்பினார். சாச்சனாவுக்கு ஏன் ஜெஃப்ரி சரியாக பதில் சொல்லவில்லை என்றும், டேபிளை அடித்துவிட்டு போனது எதற்காக என்று ஜெஃப்ரியை லெஃப்ட் ரைட் வாங்கினார். ரைட்டு.. நாம தப்பிச்சிட்டோம் என்று சாச்சனா நினைத்திருப்பார் போல.. அப்படியெல்லாம் விடுபவரல்ல விசே. ‘ஏன் சாச்சனாவை டேய் தம்பி அப்டின்னு கூப்டீங்க? ரஞ்சித் இருந்திருந்தா என்ன பண்ணிருப்பீங்க?’’ என்று கேட்டார் விசே. என் வயசு பையன் அப்டிங்கிறதுனால டேய் தம்பின்னு கூப்டேன். ‘ அந்த கேரக்டர்ல உங்க வயசு என்ன என்று லாக் செய்தார் விசே.. நாட்டி கிட் ரோல். அப்டின்னா ஜெஃப்ரி உங்களுக்கு அண்ணன் அப்டிதானே! என்று கேட்டதும் ஆடிப்போனார் சாச்சனா.
பிக்பாஸ் வீட்டை விமர்சித்த விசே
எந்த கேள்வியைக் கேட்டாலும் சுத்தி விடுறீங்க. செம போர் ஆக இருக்கு என்பதை கொட்டாவி விட்ட படியே, வீட்டில் இருந்த அனைவரையும் நோஸ் கட் செய்தார் விசே. கேள்வி கேட்டா தூங்க வைக்கிறாங்க என்று பிக்பாஸ் வீட்டையும் சேர்த்தே கலாய்த்து தள்ளினார். பிக்பாஸ் ஷோவை எதார்த்தமாக கொண்டு செல்வது குட் மூவ்.
விசே ஆடிய கேம்
பிபி ஹோட்டல் டாஸ்க்கை ஒழுங்காக விளையாடவில்லை என்று, அதை வைத்து புது விளையாட்டை விளையாடுவோம் என்று முடிவெடுத்தார் பிக்பாஸ். ஒவ்வொருவரும் மேனேஜர், ஹெல்ப்பர் & கஸ்டமரை என உங்கள் சாய்ஸ் யார் என்று சொல்ல வேண்டும். மேனேஜர் என்றால் வேலை செய்யாம வேலை வாங்கும் நபர், ஹெல்ப்பர் என்றால் சுயபுத்தி கிடையாது. சொல்புத்தி உண்டு. கஸ்டமர் என்றால் எந்த வேலையும் செய்யாமல் சும்மா சுற்றிக் கொண்டிருப்பவர்.
மேனேஜர் ஸ்டிக்கரை சுனிதாவும், முத்துக்குமரனும், தீபக்கும், ஜாக்குலினும் அதிகமாக பெற்றனர். அதுபோல, ஹெல்ப்பராக செளந்தர்யாவும் ஜெஃப்ரியும் பெற்றார். இந்த விளையாட்டில் எந்த ஸ்டிக்கரையும் விஷால், ஆனந்தி, தர்ஷிகா பெறவில்லை. இதுக்கு நீங்க சந்தோஷப்படக்கூடாது. நீங்க கவனிக்கப்படலைன்னு அர்த்தம். ஆக.. ஸ்டிக்கர் வாங்க முயற்சி செய்யுங்க என்று மூவரையும் அலெர்ட் செய்தார்.
இந்த ஆட்டத்தில் நெத்தி பொட்டில் சுடுவது போல பாயின்ட் அவுட் செய்து பேசுங்கள் என்று விசே கூறியிருந்தார். ஆனால், பெரும்பாலானோர் பூசு மொழுகியே ஸ்டிக்கரைக் கொடுத்தனர். இதனால், செம கடுப்பானார் விசே. இந்த ஆட்டத்தில் போட்டியாளர்கள் விளையாட்டை சுவாரஸ்யப்படுத்தவில்லை. ஆனால், இந்த பட்டமானது வீட்டுக்குள் தீயை கொழுத்திப் போட்டது. சுனிதாவும், முத்துக்குமரனும் என்னை போய் BOSSYனு சொல்லுறாங்களேன்னு ஃபீல் செய்தார்கள்.
கடந்த மூன்று வாரத்தில் புகுந்த வீடு சென்றதில் பெண்கள் வீட்டுக்கு வந்த ஆண்களான தீபக், முத்துக்குமரன், ஜெஃப்ரி மூவருமே நேர்மையாக விளையாடினார்கள். ஆனால், ஆண்கள் வீட்டுக்குச் சென்ற பெண்கள் மூவருமே சரியாக விளையாடவில்லை என்று தோன்றுகிறது என விசே கூறினார். அதை ஓரளவுக்கு சரியென்றே எடுத்துக் கொள்ளலாம்.
எலிமினேஷன் டைம்
இந்த வாரம் நாமினேஷன் ஆன ஏழு பேரில் முத்துக்குமரன், அருண், செளந்தர்யா மூவரையும் SAVE செய்தார் விசே. ஜாக்குலின், சத்யா, தர்ஷா, அன்ஷிதா நான்கு பேரில் யார் எலிமினேஷன் எனும் ட்விஸ்டுடன் பிரேக் விட்டுச் சென்றார் விசே. ஒவ்வொரு வாரமும் வீட்டிலிருந்து ஒருவர் எலிமினேட் ஆவது எனக்கு வருத்தம் தான் என்று வழக்கமான வசனத்துடன் சத்யாவையும் காப்பாற்றினார். ஆக, இந்த முறை பெண்கள் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
இறுதியாக, தர்ஷாவை எலிமினேட் செய்வதாக அறிவித்தார் விசே. தர்ஷாவை சவுண்டு தான் அதிகமாக மிஸ் செய்வார். தர்ஷா கிளம்புவதால் தேம்பி தேம்பி அழுதார் சாச்சனா. கேமை கேமாக பார்க்கும் பக்குவம் இன்னும் சாச்சனாவுக்கு வரவில்லை.
தர்ஷா எலிமினேட் ஆக வாய்ப்பிருப்பதாக சாச்சனா பெண்கள் டீமின் டிஸ்கஷனில் கூறினாராம். யாருமே என் பேச்சை கேட்கலை என்று சாச்சனா புகார் சொல்ல.. நீ தர்ஷா பெயரைச் சொல்லவில்லை என்று மறுத்துப் பேசினர் தர்ஷிகா. கூடவே, என் தலைக்கு வந்தது தர்ஷா தலையோடு போனதாக ஆனந்தியிடம் சண்டைக்குப் போனார் செளந்தர்யா. நாமினேஷன் ப்ரீ டாஸ்கை யாருக்கு கொடுக்க வெண்டுமென்பதில் எப்போதுமே பெண்கள் டீமில் இடியாப்ப சிக்கல் தான்.
நாமினேஷன் ஃப்ரீ பாஸூக்கு கெஞ்சுனேன். கதறுனேன்.. ஆறுபேர் கொண்ட குழு என்னை கன்சிடர் பண்ணலை. அந்த குழுவுல சுனிதாவும், ஜாக்குலினும் வெளிய போய்ட்டாலே எல்லாம் சரியாகிடும் என்று மிரட்டிவிட்டார். ஆண்கள் டீமுடன் தான் என் பாதி நேரம் இருந்தேன் என ஆண்கள் டீமுக்கு ஹார்டின் -களை பறக்கவிட்டார்.
செளந்தர்யாவையும் சாச்சனாவை மட்டும் பாராட்டிவிட்டு மற்ற பெண்களை வறுத்தெடுத்தார். ஆக, தர்ஷாவின் மேடைப் பேச்சில் வன்மம் மட்டுமே தெரிந்தது. “வெளிய வந்தாச்சு.. இரண்டு வார்த்தை நன்றாக பேசியிருக்கலாம். அர்னவ் செய்த தவறையே தர்ஷாவும் செய்தார். மன்னிப்புக் கேக்குறதும், மன்னிக்கிறதும் ரொம்ப பெரிய விஷயம். அதை செய்யுங்க” என்று விசே சொன்னது ரசிக்க கூடியதாக இருந்தது.