கமல்ஹாசன் போன்ற ஒரு மகா ஆளுமை, மிகப்பெரிய அனுபவம் கொண்டவர், அவர் தடம் பதித்த மேடையை, அவர் தனது கம்பீரத்தால் அலங்கரித்த மேடையை, மிகச்சிறந்த சொற்கள் மூலம் மிரட்டிய மேடையை, விஜய் சேதுபதி எவ்வாறு சமாளிப்பார், நிகழ்ச்சியை எவ்வாறு எடுத்துச் செல்வார் என்ற பெரும் எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே இருந்தது!
கமல்ஹாசன் 7 சீசன்களாக வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மேடையில், விஜய் சேதுபதி முதல்முறையாக தொகுப்பாளராக வந்து நின்றார். கமலின் நடுநிலைமை, நேர்மறை கருத்துகள், அரசியல் அறிவு மற்றும் துல்லியமான வழிநடத்தலின் இடத்தை நிரப்புவது எளிதான விஷயம் அல்ல. அதனால், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் விஜய் சேதுபதியின் நிகழ்சித் தொகுப்பை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
விஜய் சேதுபதி, ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு மக்கள் மத்தியில் பேராதரவு பெற்றவர். அவரின் இயல்பான நடிப்பு, நகைச்சுவை உணர்வு, மனம்விட்டு ஓப்பனாகப் பேசும் ஸ்டைல் ஆகியவை ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றவைதான். இருந்தாலும் அதெல்லாம் பிக் பாஸ் மேடையில் அவருக்கு கைகொடுக்குமா, பதற்றமாவரா, போட்டியாளர்களின் பதட்டத்தை தீர்ப்பாரா, பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துவாரா எனப் பல கேள்விகள் இருந்தது.
இந்தக் கேள்வி பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல ஏன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதிக்கே இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் அவரே பார்வையாளர்களிடம் ‘’இதுக்கு முன்னாடி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கீங்களா, நான் எப்படி?’’ என்று கேட்டு ஃபீட்பேக் என்ன என்பதையும் தெரிந்துகொண்டார்.
கவனம் ஈர்த்த விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதியின் நிகழ்ச்சித் தொகுப்பில் முதல் கவனம் ஈர்த்தது அவரின் இயல்பான, கலகலப்பான, நாடகத்தனமற்ற பேச்சுதான். அவர் தனது முதல் பிக் பாஸ் மேடையில் கமல்ஹாசனின் பாணியை கொஞ்சம்கூட பின்பற்றாமல், தன்னுடைய சொந்த ஸ்டைலில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பொதுவாகவே ஒருவர் இடத்தை மற்றொருவர் நிரப்பும்போது முந்தையவர் செய்த சில விஷயங்களைக் காப்பியடிப்பார்கள். ஆனால், விஜய் சேதுபதியிடம் கமல்ஹாசனின் மேனரிசங்களோ, போட்டியாளர்களை ஹேண்டில் செய்வதில் கமல்ஹாசனின் அணுகுமுறையோ சுத்தமாக இல்லை. கமல்ஹாசன் செய்த இதையெல்லாம் செய்யக்கூடாது என முடிவெடுத்து செய்ததுபோலவும் விஜய் சேதுபதியின் உடல்மொழி இல்லை. வழக்கமான விஜய் சேதுபதியாகவே நின்று பிக் பாஸ் மேடையையும் தனக்கான மேடையாக மாற்றிக்கொண்டதுதான் விஜய் சேதுபதியின் முதல் வெற்றி.
செளந்தர்யா நஞ்சுண்டன் தன் குரல் தான் தனக்குப் பிரச்னையே, குரலால் பல ரிஜெக்ஷன்களை சந்தித்திருக்கிறேன் என சொன்னபோது ‘’உங்க குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்குங்க… குரல் முக்கியம் இல்ல… குணம்தான் முக்கியம்'’ என சொன்னபோது செளந்தர்யாவின் கண்களில் இருந்து வெளிப்பட்ட கண்ணீர் துளியே விஜய் சேதுபதியின் நிகழ்ச்சி தொகுப்புக்கு மிகச்சிறந்த சான்று.
பக்குவமும், புன்னகையும்!
போட்டியாளர்களில் சிலரும், அவர்களுடைய குடும்பத்தினரும் விஜய் சேதுபதியை புகழ்ந்தபோதெல்லாம் அந்தப் புகழ்ச்சியை புன்னகையோடு ஏற்றுக்கொண்டதிலும் சரி, அதிலே சிலாகித்து நிற்காமல் அங்கிருந்து நகர்ந்ததிலும் சரி விஜய் சேதுபதியிடம் பக்குவம் தெரிந்தது. ஒரே ஒரு நாளில் விஜய் சேதுபதியின் நிகழ்ச்சித் தொகுப்பை இவ்வளவு பாராட்டுவது அதிகபட்சம் என்பதுபோலத் தெரிந்தாலும், தவறாக விமர்சிக்கக் கூடிய ஒரு இடத்தைக்கூட அவர் ஏற்படுத்திவிடவில்லை என்பதுதான் அவரைப் பாராட்டக் காரணம்.
கவனிப்பும், கணிப்பும்!
ஒவ்வொரு போட்டியாளரையும் கவனித்து, அவர்கள் பேசும் பேச்சுகளில் இருந்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்களுக்கே எடுத்து சொன்னவிதம் ஒரு நண்பன் சொல்வதைப் போல இருந்தது. குறிப்பாக திரையுலகில் தனக்கு சீனியரான நடிகர் ரஞ்சித்திடம் அவர் கேட்ட கேள்விகளும், அவரிடம் இருந்து வாங்க முயற்சி செய்த பதில்களும் ஒத்திகைப் பார்த்து செய்யமுடியாதவை. ஒப்பனைகள் அற்றவை. ‘சிந்துநதிப்பூ’ படத்தின் போது ஒரு நம்பிக்கைக்குரிய நண்பனைப்போல இருந்த ரஞ்சித்தை இப்போது பார்க்கமுடியவில்லையே, ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்தான் உண்மையானவரா, நாங்கள்தான் தவறாகப் புரிந்துகொண்டோமா என அவர்கேட்டபோது, ரஞ்சித்திடம் இருந்து உண்மையான பதிலை வாங்கி, அவரை எல்லோருக்குமான போட்டியாளராக கொண்டுசேர்க்கவேண்டும் என்கிற அக்கறையும் விஜய் சேதுபதியிடம் தெரிந்தது.
கிட்டத்தட்ட 6 மணி நேரம் நிகழ்ச்சியை அவர் தன்னம்பிக்கையுடன் கொண்டு சென்றவிதமும், அவரது அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியவை. தனது சொற்களிலும், மக்களோடு தொடர்பு கொள்ளும் விதத்திலும் அவர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார். அவரது உற்சாகம் மற்றும் பாசாங்கில்லாத பேச்சு பிக் பாஸ் மேடையில் ஒரு அழுத்தத்தை நீக்கி ஒரு இயல்புதன்மையைக் கொண்டுவந்தது. அவரின் மெல்லிய நகைச்சுவை உணர்வு நிகழ்ச்சி முழுக்கவுமே வெளிப்பட்டது.
இதே பக்குவம் தொடருமா?!
விஜய் சேதுபதியின் முதல் நாள் நிகழ்ச்சி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது என்றாலும், அவர் இந்த நிலையை தக்கவைப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அடுத்தடுத்த வாரங்களில் எப்படி நடுநிலை தவறாது அவர் நிகழ்ச்சியை தொகுத்தளிக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கு இப்போதே ஆவல் எழுந்திருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மாற்றம் என்று இல்லாமல், இதை நிகழ்ச்சியின் வரலாற்றில் ஒரு புதிய பரிமாணமாகக் கொண்டு சென்றதில் இருக்கிறது விஜய் சேதுபதியின் வெற்றி. முதல் நாளே அசத்தியிருக்கும் விசே, அடுத்தடுத்த வாரங்களில் பவர் ப்ளே பேட்ஸ்மேனாக அடித்து ஆடி பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் புதிய உயரத்துக்கு கொண்டுசெல்வார் என எதிர்பார்க்கலாம்!