விஜய் டிவியின் புகழ்பெற்ற நான் ஃபிக்ஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘குக்கு வித் கோமாளி’. ஐந்தாவது சீசனான இந்தாண்டுக்கான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களில் முக்கியமானவரான வெங்கடேஷ் பட் விலகியது, முதல் சீசனில் இருந்து நிகழ்ச்சியைத் தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனம் விலகியது எனப் பல சர்ச்சைகளுக்கிடையேதான் இந்த சீசன் தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பாக 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி நடைபெற்று முடியும். அந்த வகையில் குக்கு வித் கோமாளி தற்போது அரையிறுதிப்போட்டி வரை வந்துவிட்டது. அடுத்த வாரம் இறுதிப்போட்டி நடக்க இருக்கும் நிலையில் கடந்த வாரம் பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி செட்டில் அரையிறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் நடந்தது.
கடந்த மூன்று சீசன்களாக இதில் கோமாளியாக இருந்த முன்னாள் சன் டிவி விஜே மணிமேகலை போன சீசனில் இருந்து தொகுப்பாளாராக மாறினார். இந்த சீசனில் வழக்கமாக தொகுப்பாளராக இருக்கும் விஜய் டிவியின் பிரியங்கா போட்டியாளராகக் கலந்துகொண்டார். இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே போட்டியாளராக இல்லாமல் ஆங்கர் போல நடந்துகொள்கிறார் என பிரியங்காவுக்கும், மணிமேகலைக்கும் இடையே ஒரு உரசல் இருந்தது. அது கடந்த வாரம் நடந்த அரையிறுதிப்போட்டி ஷூட்டில் வெளிப்படையாக பிரியங்காவுக்கும், மணிமேகலைக்கும் சண்டையாக மாறியது.
பிரியங்காவை அரையிறுதிப்போட்டிக்குள் வரவேற்பதையோ, அவரைப் பார்த்து பேசுவதையோ முற்றிலுமாகத் தவிர்த்தார் மணிமேகலை. இதனால் ரக்ஷன் மட்டுமே பிரியதர்ஷினியை அறிமுகம் செய்துவைத்து அவரது குக்கிங் பார்ட்னராக ‘பாரதி கண்ணம்மா’ வினுஷாவை அறிவித்தார். இதற்கிடையே போட்டி தொடங்குவதற்கான பில்ட்அப் நடக்கும்போதே பிரியங்காவுக்கும், மணிமேகலைக்கும் செட்டிலேயே வாக்குவாதம் நடக்க, பாதியிலேயே வெளியேறிவிட்டார் மணிமேகலை. இதனால் நிகழ்ச்சியின் பாதியில் இருந்தே ஒற்றைத் தொகுப்பாளராக ரக்ஷனே நிகழ்ச்சியை நடத்தினார். இந்த எபிசோட் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது.
இதற்கிடையே குக்கு வித் கோமாளியில் இருந்து தான் வெளியேறியது குறித்தும், என்ன நடந்தது என்றும் பதிவிட்டிருக்கிறார் மணிமேகலை. ‘’இனி குக்கு வித் கோமாளியில் நான் இல்லை. 2019 நவம்பரில் இருந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ட்ரெஸ் பஸ்டராக என்னுடைய பயணம் தொடங்கியது. இவ்வளவு காலமாக மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் எனது 100 சதவிகித கடின உழைப்பை இந்த நிகழ்ச்சிக்காக நான் கொடுத்திருக்கிறேன். ஆனால் சுய மரியாதையை விட முக்கியமானது எதுவுமில்லை. புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் இந்த சீசனில் இருந்து விலகிவிட்டேன்.
இந்த சீசனில் போட்டியாளராக இருந்த மற்றொரு பெண் தொகுப்பாளர் நிகழ்ச்சியில் ஆதிக்கம் செலுத்தினார். குக்காக இல்லாமல் அவர் ஆங்கரிங் போர்ஷன்களில் தலையிட்டார். வேண்டுமென்றே என் வேலையைச் செய்ய விடாமல் நிறைய முறை குறுக்கிட்டார். என் உரிமைக்காக குரல் எழுப்பியதுகூட பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது. இது நான் முன்பு வேலை செய்து மகிழ்ந்த அதே CWC அல்ல. எனவே நான் அதன் ஒரு பகுதியாக இனி இருக்கவிரும்பவில்லை. என்னை வேலை செய்யவிடாமல் தடுத்தவர் இன்னும் நல்ல வாய்ப்புகள் பெற்று சந்தோஷமாக இருக்கட்டும். வாழு, வாழவிடு'’ என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் மணிமேகலை.
தொடர்ந்து விஜய் டிவியின் பல ஷோக்களில் பிரியங்காவின் ஆதிக்கம் இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக ஒருவர் பிரியங்காவின் மீது வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால், பிரியங்காவோ இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் மெளனம் காத்துவருகிறார்.