விஜய் டிவிக்கு பல நேரங்களில் பிக் பாஸை விடவும் அதிக டிஆர்பி தரும் நிகழ்ச்சி 'குக்கு வித் கோமாளி'. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.
இந்த கான்செப்ட்டுக்கு செயல்முறை வடிவம் கொடுத்து இந்த நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசன்களாக தயாரித்தது மீடியா மேசன்ஸ் எனும் நிறுவனம். இந்நிகழ்ச்சியின் முகங்களாக செஃப் வெங்கடேஷ் பட்டும், செஃப் தாமுவும்தான் இருந்தார்கள். ஆனால், இந்தாண்டு விஜய் டிவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்குப் போய் அங்கே ‘டாப்பு குக்கு டூப்பு குக்கு' எனும் நிகழ்ச்சியைத் தொடங்கியது. இதன் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட்டும் அங்கே போனார்.
இதற்கிடையே 'குக்கு வித் கோமாளி'யில் நடுவராக பிரபல கேட்டரிங் உரிமையாளரான மாதம்பட்டி ரங்கராஜ் நிகழ்ச்சிக்குள் வந்தார். பல போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளோடு தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் நேற்று பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி-யில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா, மணிமேகலையுடன் சண்டையில் ஈடுபட்ட பிரியங்கா, யூடியூபர் இர்ஃபான் ஆகியோர் மோதினர். இதில் பிரியங்கா வெற்றிபெற்றிருக்கிறார். ஏற்கெனவே விஜய் டிவி ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறது என்கிற குற்றச்சாட்டுகளுக்கு இடையே பிரியங்கா வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டி வரும் செப்டம்பர் 30-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.