ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு தமிழ் சீரியல் ட்ரெண்ட் ஆவது வழக்கம். ஹிட் என்பது வேறு, ட்ரெண்ட் ஆவது வேறு. ஒரு சீரியலில் வியூவர்ஷிப் வைத்து கணக்கிடப்படும் டிஆர்பி ரேட்டிங், அந்த சீரியல் ஹிட்டா இல்லையா என்பதை மதிப்பிடும். ஆனால் ஒரு சீரியல் ட்ரெண்டிங்கில் இடம்பிடிப்பது என்பது சமூக வலைதளத்தில் அது ஏற்படுத்தும் விவாதம் மற்றும் தாக்கத்தை குறிக்கிறது.
சில மாதங்கள் முன்பு வரை சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர் நீச்சல்' சீரியல் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருந்தது. ஆணாதிக்க குடும்ப தலைவர் ஆதி குணசேகரை சமாளிக்கும் நான்கு பெண்களின் கதை 'எதிர் நீச்சல்'.
சீரியல் ஆரம்பமான புதிதில் திருமணத்தில் மணப்பெண் நடனம் ஆடுவதை ஆதி குணசேகரன் விமர்சிப்பார். அந்த காட்சி ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. அவ்வளவு தான் ஆதி குணசேகரன் ரோலில் நடித்த மாரிமுத்துவும் ட்ரெண்ட் ஆனார்.
அவரின் இறப்புக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் வருந்தியது. அவர் தமிழக மக்களின் அன்பை பெற முக்கிய காரணம் 'எதிர் நீச்சல்' சீரியல். அவர் இயக்கிய, நடித்த படங்கள் கொடுக்காத புகழை சீரியல் தேடிக் கொடுத்தது. அதன்பின்னர் அந்த சீரியலில் இடம் பிடித்த பல காட்சிகள் ட்ரெண்ட் ஆனது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாக்கியலட்சுமி' சீரியலும் பெரியளவில் ட்ரெண்ட் ஆனது. திருமணமான மகன், கல்யாண வயதில் ஒரு மகன், கல்லூரி செல்லும் மகள் ஆகியோருக்கு தந்தையான கோபி 45 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொள்வார்.
கல்லூரி கால காதலியான ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்வார். இப்படி ஒரு காட்சி தமிழ் சீரியல்களில் இதுவரை இடம் பெற்றதில்லை. எனவே சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. கோபி - ராதிகா திருமண காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டது. பலரால் பாராட்டையும் பெற்றது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'பாரதி கண்ணம்மா' சீரியலில் மாநிறமாக இருக்கும் நாயகி நிறத்தால் பாகுபாட்டை எதிர்கொள்வார். அவர் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடந்து கொண்டே இருப்பார்.
அந்த காட்சி வைரலாகி மீம் மெட்டிரீயல் ஆனது. அந்த சீரியல் ஹிட் ஆனதோ இல்லையோ கண்ணம்மா காட்சி ட்ரெண்ட் ஆனது.
இந்த வரிசையில் தற்போது 'சிறகடிக்க ஆசை' சீரியல் இடம்பிடித்திருக்கிறது. ட்ரெண்டிங்கில் இடம்பிடிப்பது மட்டும் இல்லாமல், டிஆர்பியிலும் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது.
சீரியலே பார்க்காத பலரும், நான் பார்க்கும் ஒரே சீரியல் `சிறகடிக்க ஆசை’ என்கின்றனர். சமூக ஊடகங்களில் அதிகளவில் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற முக்கிய காரணம் சீரியலின் கதை.
இழுவையாக இல்லாமல் கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
தமிழ் சீரியல் ரசிகர்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப் போகும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். பூ வியாபாரம் செய்யும் மீனா, கார் ஓட்டுநர் முத்து, டப்பிங் ஆர்டிஸ்ட் ஸ்ருதி, பார்லர் வைத்திருக்கும் ரோகிணி என ஒவ்வொரு கதாபாத்திரமும் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு யதார்த்தமான முகங்களை இயக்குநர் தேர்வு செய்திருக்கிறார்.
சீரியலில் விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அனிலாவை தவிர மற்றவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தமிழ் பேசும் முகங்கள் என்பதால் ரசிகர்கள் மனதில் சட்டென இடம்பிடித்துவிட்டனர்.
பிரபலமான நடிகர்களை நம்பி சீரியல் எடுக்காமல், யதார்த்தமான முகங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். சீரியலில் மிகவும் பிரபலமான ஒருவர் இயக்குநர் சுந்தர்ராஜன் தான். அவரும் பெரிய இயக்குநர், நடிகர் என்ற பிம்பத்தை விட்டுவிட்டு சாதாரண குடும்ப தலைவராக மனைவியிடம் திட்டு வாங்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
கொலை செய்ய திட்டம் தீட்டும் மாமியார், சூழ்ச்சி செய்யும் நாத்தனார் இப்படி வழக்கமான காட்சிகள் இல்லாமல், ஒரு வீட்டில் வசதியான மருமகளுக்கும் ஏழை வீட்டு மருமகளுக்கும் இடையே காட்டப்படும் வேற்றுமை, ஈகோ, ஒரே நாளில் சரியாகும் கணவன் மனைவி சண்டை இப்படியான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.