வள்ளியின் வேலன் 
சீரியல் எபிசோட் ஹைலைட்ஸ்

'வள்ளியின் வேலன்' இன்று : வள்ளியால் நின்ற கல்யாணம்… அவமானத்தால் ரத்னவேல் பாண்டியன் செய்த சம்பவம்?!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொலைக்காட்சித் தொடர் ‘வள்ளியின் வேலன்’. ரியல் லைஃப் தம்பதிகளான ஷ்ரேயா - சித்து இத்தொடரில் வள்ளி - வேலனாக நடிப்பதால் சீரியல் ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.

சிவா

வள்ளியின் வேலன் தொடரில் சாக்‌ஷி சிவா ரத்னவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில், ஷ்ரேயாவின் அப்பாவாக நடிக்கிறார். கல்வி அமைச்சரான ரத்னவேல் தனக்கு துரோகம் செய்துவிட்டுப்போன மனைவியின் மீது கடும்கோபத்தில் இருக்கிறார். அந்தக் கோபத்தின் கனல் ஒரே மகளான வள்ளியின் மீது வெறுப்பாய் மாறுகிறது. மகளைக் கண்டாலே அனலாய் கொதிக்கிறார் ரத்னவேல் பாண்டியன். 

இந்தக் கோபத்தை இன்னும் கிளறி, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி எப்படியாவது தன் தம்பி ரத்னவேலின் ஒரே மகளான வள்ளியை தன்னுடைய மகன் தீபக்கிற்கு மணம் முடித்துவைத்து அரசியல் வாரிசாக உயர்த்த திட்டமிடுகிறாள் வேதநாயகி. 

இந்த சதி, சூழ்ச்சிகளை எட்ட நின்று பார்க்கும் ரத்னவேலின் பி.ஏ-வும், நம்பிக்கைக்குரிய விசுவாசியுமான கதிர்வேலன் அப்பாவையும்- மகளையும் இணைக்க, பிணக்குகளை பாசமாக மாற்ற அலட்டிக்கொள்ளாமல் பல விஷயங்களை செய்கிறான். தந்தைக்கு மிகப்பெரிய அரணாய், தனக்கு கண்ணியமிக்க காவலனாய், எளிமையின் அடையாளமாய் நிற்கும் வேலனின் அன்பில் நெகிழ்ந்துபோகிறாள் வள்ளி.

வள்ளியின் அன்பை ரத்னவேல் புரிந்துகொள்வாரா, ஓடிப்போன மனைவியைத் தேடிப்போவாரா, மகளை மனம் மாறி ஏற்றுக்கொள்வாரா, வள்ளியும் - வேலனும் ஒன்றிணைவார்களா என்பதுதான் இந்த சீரியலின் முழுக்கதை. இந்த சீரியலை யாத்ரா மீடியா எனும் நிறுவனம் ஜீ தமிழுக்காக தயாரித்து வழங்குகிறது!

வள்ளியின் வேலன்

இப்போது இன்றைய (09-09-2024) எபிசோடில் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்!

கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வள்ளி தன்னைத்தான் பெண் பார்க்க வருவதாக நினைத்துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டாரை சாலையில் சந்தித்து தன்னைப் பற்றித் தானே தவறாகச் சொல்கிறாள். விஷயம் அறிந்து பைக்கில் பறந்து வரும் வேலன் ‘’அய்யோ மேடம்… உங்களுக்குப் பொண்ணு பார்க்க வரல… ரஞ்சனிக்கு'’ என உண்மையைச் சொல்ல அதிர்ந்து போகிறாள் வள்ளி.

அவமானப்பட்ட ரத்தினவேல்!

வள்ளியை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வரும் வேலன் அவளை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் அனுப்பி வைத்து விட்டு எதுவும் நடக்காதது போல அமைச்சர் அருகில் இருக்கிறான்.  மாப்பிள்ளை வீட்டார் வீட்டுக்கு வந்து ‘’உங்க பொண்ணை பத்தி வெளில தப்பு தப்பா சொல்றாங்களே’’ என்று சொல்ல அதை கேட்டு ரத்தினவேல் பாண்டியன் ஆவேசம் அடைகிறார். 

மாட்டிக்கொண்ட வள்ளி!

‘’நான் ஒரு அரசியல்வாதி… எதிர்க்கட்சிக்காரங்க அப்படித் தான் தப்பு தப்பா பேசுவாங்க… அதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க’’ என்று சொல்ல நடப்பதையெல்லாம் வள்ளி மாடிப்படியில் நின்றபடி யாருக்கும் தெரியாமல் பதபதைப்போடு கேட்டு கொண்டிருக்கிறாள்.

வள்ளியின் வேலன்

இந்த நேரத்தில் வேலன் வள்ளியை பார்த்து மேலே போகச் சொல்லி கண் காட்ட அவள் மேலே செல்லும் போது கைப்பட்டு பூ சட்டி கீழே விழுந்து உடைய மொத்த பேரும் மேலே பார்க்க மாப்பிள்ளை வீட்டார் ‘’இந்தப் பொண்ணு தான்… இந்தப் பொண்ணுதான்... உங்கப் பொண்ணை பத்தி தப்பா சொல்லுச்சு’’ என போட்டு கொடுக்கிறார்கள்.

அதிரவைத்த ரத்தினவேல்!

‘’உங்க வீட்டுல இருக்கப் பொண்ணே கல்யாணப் பொண்ணைப் பத்தி இப்படி சொல்லுதனா அப்ப எல்லாமே உண்மையாத்தானே இருக்கும்… இந்த கல்யாணமே வேண்டாம்'’ என்று மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப ரத்தினவேல் கோபமாகி வள்ளியை பளார் என அறைகிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்கிற பரபரப்புடன் முடிந்திருக்கிறது வள்ளியின் வேலனின் ஆறாவது எபிசோட்!

'வள்ளியின் வேலன்' தொடரின் தினசரி எபிசோட் ஹைலைட்ஸை newstremor.com தளத்தில் படிக்கலாம்!