'‘முன்னர் ஒப்புக் கொண்ட படங்களுக்காக வரவிருக்கும் பிக் பாஸ் சீசன் எட்டை தொகுத்து வழங்க இயலாத நிலையில் இருக்கிறேன்'’ என்று கமல்ஹாசனிடமிருந்து அறிவிப்பு வெளியான போது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியும் சோகமும் ஏற்பட்டது.
பிக் பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோ தமிழிற்குள் வந்த போது ஆரம்பத்தில் விநோதமாகப் பார்க்கப்பட்டது. ‘செலிபிரிட்டிகளை அறையில் அடைத்து வைப்பார்களாம்.. இவர்களை நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமாம்.. என்னய்யா நிகழ்ச்சி இது?’ என்று பேசப்பட்டது. ஆனால் உலகம் பூராவும் ஹிட் அடித்த இந்த ஷோ, தமிழில் மட்டும் வெற்றியடையாமல் இருக்குமா என்ன? அதிலும் வம்பு பேசுவதில் மிகுந்த ஆர்வமுடைய தமிழ் சமூகத்தில் இந்த நிகழ்ச்சி வெற்றி பெறாமல் போயிருந்தால்தான் ஆச்சரியம்.
‘அய்யே.. இந்த சீசன் போருப்பா..’ என்று பாவனையாக சலித்துக் கொண்டாலும் சீசனுக்கு சீசனுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கான அளவிற்கு பெருகிக் கொண்டேதான் செல்கிறது. அதற்கு இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பில் உள்ள விநோதங்களும் விபரீதங்களும் முக்கியமான காரணங்கள் என்றாலும் இந்த நிகழ்ச்சி தமிழில் வெற்றி பெற்றதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. ஆம், அது கமல்ஹாசன்.
பிக் பாஸிற்கு வலுவான அஸ்திவாரத்தைத் தந்த கமல்!
பிக் பாஸ் ஷோவை தினமும் பார்க்காதவர்கள் கூட, வார இறுதியில் தவறாமல் பார்க்க ஆரம்பித்ததற்கு கமல்ஹாசனின் வருகையே முக்கியமான காரணம். அவருடைய சமயோசித நகைச்சுவை, சினிமா அனுபவங்கள், சமூக அக்கறையுடன் கூடிய முன்னுரைகள், அரசியல் பன்ச் வசனங்கள், போட்டியாளர்களை ஜாலியாக கலாய்ப்பது, தீவிரமாக விமர்சனம் செய்வது, சொந்த அனுபவங்களில் இருந்து ஆத்மார்த்தமான அறிவுரைகளைச் சொல்வது, ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவது, புத்தகப் பரிந்துரை என்று பல காரணங்களின் வழியாக பிக் பாஸ் ஷோவிற்கு சுவாரசியம் கூட்டினார் கமல்ஹாசன்.
மிக குறிப்பான காரணம் ஒன்றுண்டு. இதர ரியாலிட்டி ஷோக்களைப் போல பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறுமனே ஜாலியாக சிரித்துப் பேசி, டிஆர்பி-க்காக செயற்கையான பரபரப்புகளை ஏற்றி விட்டுச் சென்று விட முடியாது. மற்ற ரியாலிட்டி ஷோக்களில் சில மணி நேரங்களுக்கு ஏதாவது விளையாட்டுப் போட்டிகளை வேடிக்கையாக நடத்தி விட்டுச் சென்று விடுவார்கள். அத்தோடு அது முடிந்து விடும்.
பிக் பாஸ்: விநோதம் மற்றும் விபரீதத்தின் கலவை
ஆனால் பிக் பாஸ் என்பது அப்படியல்ல. அசலான மனிதர்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையின் ஒரு துண்டை மக்களுக்கு காட்சிப்படுத்தும் பரிசோதனை நிகழ்ச்சி. நூறு நாட்களுக்கு மேலாக நீளும் பரிசோதனை இது. ஆரம்பத்தில் சில நாட்களில் செயற்கையாக சிரித்து நடிக்கலாம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, ஒவ்வொரு போட்டியாளருக்குள் இருக்கும் அசலான வன்மங்கள், வெறுப்புகள், குணாதிசயங்கள், நற்குணங்கள் போன்றவை வெளிப்பட ஆரம்பிக்கும். அதுவரையான ஒப்பனை முகங்கள் மெல்ல கலைய ஆரம்பிக்கும். அசலாக வெளிப்படும் இந்த மாற்றங்கள் பார்வையாளர்களிடம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
“ச்சே.. இப்படியா ஒருத்தன் பண்ணுவான்.. பாவம்ப்பா அவன்..” என்று கட்சி பிரித்துக் கொண்டு விவாதிப்பார்கள். “இவன்தான் ரைட்டு.. இல்ல.. இல்ல. அவன் பண்ணதுதான் தப்பு” என்று.. இந்த விவாதங்கள் குடுமிப்பிடிச்சண்டை அளவிற்கு சமூகவலைத்தளங்களில் நிகழும். அப்படித்தான் ஒவ்வொரு சீசனிலும் நடந்தது. நடக்கப் போகிறது. அதாவது இந்த ஷோவில் நிகழும் ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவுகளும் இதன் பார்வையாளர்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
கத்திமுனையில் நட்ப்பது போன்ற ஆபத்தான இந்த நிகழ்ச்சியை ஒருவர் பொறுப்புடன் வழிநடத்திச் செல்ல வேண்டும். நிகழ்ச்சியின் வெற்றிக்காகவும் பரபரப்பிற்காகவும் எதை வேண்டுமானாலும் செய்து, பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடக்கூடாது.
கமல்ஹாசனின் கண்ணியமும் பொறுப்புணர்ச்சியும்
இந்த நோக்கில், இது வரை நடந்த அத்தனை சீசன்களிலும் கமல்ஹாசனின் பங்களிப்பு பொறுப்புணர்ச்சி கொண்டதாகவும் கண்ணியம் மிக்கதாகவும் இருந்தது. '‘இந்த நிகழ்ச்சியை பெரியவர்கள் மட்டுமன்றி, குழந்தைகளும் பார்க்கிறார்கள். எனவே அதற்கான கண்ணியத்தைக் கடைபிடியுங்கள்’ என்று போட்டியாளர்களுக்கு அறிவுரை தந்ததோடு, சிகரெட் பிடிக்கும் காட்சிகளை தணிக்கை செய்தது, தண்ணீர்ப் பஞ்சத்தில் நீச்சல் குளத்தை காலியாக வைத்தது, போட்டியாளர்கள் எல்லை மீறிய வார்த்தைகள் பேசிய போதும் சரி, மற்றும் செயல்களில் ஈடுபடும் போதும் சரி, அவர்களை எச்சரித்து அரசியல்சரித்தன்மையுடன் வழிநடத்துவது என்று பல விஷயங்களை பொறுப்புணர்வுடன் கையாண்டார் கமல்ஹாசன்.
ஆனால் என்னதான் கமல்ஹாசன் திறமையாக இந்த நிகழ்ச்சியை வழிநடத்திச் சென்றாலும் அவர் மீது விமர்சனங்களும் எழாமல் இல்லை. ‘என்னய்யா. வழவழா கொழ கொழான்னு பேசறாரு. வெட்டு ஒண்ணு.. துண்டு ரெண்டுன்ற மாதிரி கட் அண்ட் ரைட்டா சொல்ல வேண்டாமா?” என்று சிலர் சலித்துக் கொண்டார்கள். எலிமினேஷன் போன்ற முக்கியமான முடிவுகளின் போது சர்ச்சைகள் வெடித்து பெரிதாகின.
உதாரணத்திற்கு கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனி என்கிற போட்டியாளர், ரெட் கார்ட் தந்து வெளியேற்றப்பட்ட போது ‘Justice for pradeep’ என்று சமூகவலைத்தளங்களில் ஒரு தரப்பிடமிருந்து பெரிய போராட்டமே நிகழ்ந்தது. பிக் பாஸ் டீம் மற்றும் கமல்ஹாசன் எடுக்கும் சில முடிவுகள் காரசாரமாக விமர்சிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் முகமாக கமல்ஹாசன் இருந்ததால் அவர் மீது நிறைய கல்லடிகள் விழுந்தன. தங்களுக்கு வேண்டிய போட்டியாளர்களுக்கு மட்டும் கமல் மறைமுக சலுகைகளை, வாய்ப்புகளைத் தருகிறார் என்றும் பேசப்பட்டது. சாதிய ரீதியான புகார்கள் கூட இருந்தன.
எனவே, எட்டாவது சீசனை தொகுத்து வழங்க இயலாது என்கிற கமல்ஹாசனின் அறிவிப்பு வெளியான போது சோகமடைந்தவர்களைத் தாண்டி ‘ஹப்பாடா!..’ என்று மகிழ்ச்சியடைந்தவர்களும் இருக்கிறார்கள்.
கமல்ஹாசனுக்கு சரியான மாற்றாக விஜய்சேதுபதி இருப்பாரா?
ஓகே.. எப்படியோ வரவிருக்கின்ற எட்டாவது சீசனில் கமல் இல்லை என்றாகி விட்ட பிறகு, அந்த இடத்தை பொறுப்புடனும் சுவாரசியத்துடனும் நிரப்பக்கூடிய இன்னொரு பிரபலம் வேண்டுமல்லவா? அது யார்?.. அரவிந்த்சாமி, சூர்யா, பிரகாஷ்ராஜ், நயன்தாரா, சிம்பு என்று பல பிரபலங்களின் பெயர்கள் இதற்காக அடிபட்டன. ரசிகர்கள் தங்களின் விருப்பங்களையும் யூகங்களையும் மானாவாரியாக அடுக்கினார்கள். இந்த வரிசையில் விஜய்சேதுபதியின் பெயரும் இருந்தது. கணிசமானவர்களின் தேர்வு விஜய் சேதுபதி என்பதாகவே இருந்தது. அதுவே இப்போது நிஜமாகியிருக்கிறது.
கமலின் இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா? அதே வரவேற்பைப் பெறுவாரா? விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வார்… ?
அது எந்தத் துறையாக இருந்தாலும் வசதியான பெற்றோர்கள் மற்றும் செல்வாக்குள்ள பின்புலம் இல்லாமல், அடியிலிருந்து கிளம்பி தானே முட்டி மோதி போராடி மேலே நகர்ந்து வரும் ஆசாமிகளை பொதுச்சமூகத்திற்கு எப்போதுமே பிடித்துப் போகும். அந்த வெற்றியை தன்னுடைய வெற்றியாகப் பார்ப்பார்கள். ஏனெனில் அவர்களும் அதே மாதிரியாக வெவ்வேறு துறைகளில் முன்னேறுவதற்காக போராடிக் கொண்டிருப்பவர்கள்.
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி அடைந்த வெற்றியும் இவ்வாறானதுதான். படிப்பு சரியாக வராத விஜய்சேதுபதி எப்படியோ கல்லூரி வாழ்க்கையைக் கடந்து சேல்ஸ்மேன் உள்ளிட்டு பல்வேறு பணிகளைச் செய்தார். பி.காம் படிப்பு காரணமாக துபாயில் அக்கவுன்டன்ட் வேலை. சென்னைக்குத் திரும்பி சில சிறு தொழில்கள். கூத்துப்பட்டறை என்கிற நாடகக்குழுவின் போஸ்டரைப் பார்த்து விட்டு அங்கு கணக்காளராக பணியில் இணைகிறார். நாடக அரங்கு, நடிகர்கள், அங்கு நிகழும் பயிற்சிகள் போன்றவற்றை மௌனமாக, ஆனால் உன்னிப்பாக கவனிக்கிறார்.
விஜய்சேதுபதியின் தனித்துவமான பாணி
சினிமாவில் நடிப்பதற்காக முயலும் போது பல இடங்களிலும் தோல்விதான் கிடைக்கிறது. கமல்ஹாசனின் ‘நம்மவர்’ படத்தில் கூட்டத்தில் நின்று நடிப்பதற்காக சென்ற போது ‘உயரம் குறைவு’ என்கிற காரணத்தைச் சொல்லி அனுப்பப்படுகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய குறும்படங்களில் நடிப்பதின் மூலம் சிறிய வெளிச்சம் கிடைக்கிறது. செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவிற்கு நண்பன் போன்ற சிறிய வேடங்கள் கிடைக்கின்றன. சீனுராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் முதன்முறையாக ஒரு பிரதான பாத்திரம் கிடைக்கிறது. அந்தப் படம் தேசிய விருதுகளைப் பெற்றாலும் வாய்ப்பு என்பது எளிதில் கிடைக்கவில்லை. ‘பிட்ஸா’ திரைப்படம் விஜய்சேதுபதிக்கு ஒரு முக்கியமான கவனத்தைப் பெற்றுத் தருகிறது. அதன் பிறகு அவருடைய வெற்றிகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஆக... தானே முட்டி மோதி முன்னுக்குப் போராடிய விஜய்சேதுபதி போன்ற ஆசாமிகளை மக்களுக்குப் பிடிக்கும் என்பது பின்னர் உண்மையாயிற்று. அது மட்டுமல்ல, ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் நடக்க வேண்டும், கம்பீரமாக வசனம் பேச வேண்டும் என்றிருக்கிற பல செயற்கையான விஷயங்களை விஜய்சேதுபதி அநாயசமாக உடைத்தார். ‘சுமார் மூஞ்சி குமாரு’ என்று ஹீரோவையே பங்கம் செய்யும் பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்திப் போனார்.
விஜய்சேதுபதியின் நடிப்புப் பாணி தனித்துவமானது. ‘ஒரே மாதிரியாக நடிக்கிறார்’ என்கிற புகார் எழுந்தாலும் எந்தவொரு பாத்திரத்திலும் மிகையாக நடித்து ‘இன்னாடா அவார்டா தராங்க?’ என்று ஓவர்ஆக்ட் செய்யாமல் மிக இயல்பான வசனங்கள், முகபாவங்கள், அசைவுகளின் மூலம் சுவாரசியமாக்கி விடுவார். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம்..
மணிரத்னத்தின் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் பெரும்பாலும் இயக்குநர் சொல்லித் தரும் மீட்டரில்தான் நடிக்க வேண்டும். ‘ஏன்.. எதுக்கு வந்தே..?” என்று துண்டுத் துண்டான வசனங்களை ரகசியக்குரலில் மணிரத்னத்தின் பாணியில் பேசியாக வேண்டும். ஆனால் ‘செக்கச் சிவந்த வானம்’ என்னும் படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பு மாத்திரம் துண்டாகத் தெரியும். அது மணிரத்னத்தின் படமாக இருந்தாலும் தன்னுடைய பிரத்யேகமான பாணியை கைவிடாமல் நடித்திருப்பது அவருடைய தனித்துவத்திற்குச் சான்று.
விஜய்சேதுபதிக்கு ரசிகர்களை விடவும் ரசிகைகள் மிக அதிகம். வீரமான, கம்பீரமான அடையாளத்துடன் இருக்கிற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும் என்பது அடிப்படையில் உண்மைதான். ஆனால் அதை விடவும் இயல்பான, தரையில் கால் படுமாறு நடக்கிற சாமானிய ஹீரோக்களை கூடுதலாகப் பிடிக்கும். பாக்யராஜ், மோகன், முரளி, ராமராஜன் போன்ற நாயகர்கள் வெற்றி பெற்றதற்குப் பின்னால் இருக்கிற காரணங்களில் இதுவும் ஒன்று. இந்த வரிசையில் விஜய்சேதுபதியின் இயல்பான நடிப்பும், அசைவுகளும் பெண்களுக்குப் பிடிக்காமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
மக்களைக் கவர்ந்த மக்கள் செல்வன், பிக் பாஸிலும் அசத்துவாரா?
இது தவிர, விஜய்சேதுபதி தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான பாத்திரங்கள், கதைகள், இயக்குநர்கள், தயாரிக்கும் படங்கள் போன்றவையும் காரணம். முட்டி மோதி முன்னுக்கு வந்து புகழின் பாதையில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு திருநங்கையின் பாத்திரத்தில் நடிக்க எந்தவொரு ஹீரோவாவது முன்வருவாரா? அது போன்ற பரிசோதனை முயற்சிகளை தயங்காமல் துணிச்சலுடன் ஏற்றது கூட மக்களிடையே புகழும் மதிப்பும் அன்பும் பெற்றதுக்கு காரணங்களாக இருக்கும்.
அதெல்லாம் சரி, புகழ்பெற்ற நடிகர், இயல்பான நடிகர் என்பதாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செட் ஆகி விடுவாரா? நடிப்புத் துறையைத் தாண்டி வெளியுலக வாழ்க்கையில் தென்படும் விஜய்சேதுபதியின் ஆளுமையும் முக்கியமானது. அந்த நோக்கிலும் அவருடைய சித்திரம் வசீகரமானதாக இருக்கிறது.
‘மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் முன்அனுபவம் கைகொடுக்குமா?
பெரும்பாலான பிரபலங்கள், மேடைகளில் பேசும் போதும் சரி, நடக்கும் போது சரி, ஏதோ வானத்தில் இருந்து குதித்து வந்த சிறப்பு மனிதர்கள் என்பது மாதிரியே இயங்குவார்கள். அதைப் போன்றவர்களிடம் மக்களுக்கு அவ்வளவாக ஒட்டுதல் ஏற்படாது. ஆனால் சிலர் இந்தத் தடைகளை உடைத்து “நான் அவ்ளோ பெரிய ஆள்லாம் இல்ல.. உங்களை மாதிரி சாதாரணமானவன்தான்” என்று புகழின் சுமையை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இயல்பான உடல்மொழியில் இருப்பார்கள். இவர்களை மக்களுக்குப் பிடிக்கும். அந்த நோக்கில் விஜய்சேதுபதியிடம் வெளிப்படும் இயல்புத்தனமான அணுகுமுறை கணிசமானவர்களை, குறிப்பாக இளையதலைமுறையை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
வெறுமனே இயல்புத்தன்மை அல்ல. மேடைகளில் வெளிப்படும் விஜய்சேதுபதியின் பேச்சிலும் சரி, சிந்தனைகளிலும் சரி, ஒரு தனித்துவம் தெரிகிறது. ‘நான் அவ்வளவு படிச்சவன் இல்ல’ என்று சொல்லிக் கொண்டாலும் எந்தவொரு விஷயத்தையும் தனக்கான சிந்தனையில் பொருத்திப் பார்த்து, மனதிலிருந்து ஆத்மார்த்தமாக உரையாடி, சரியான வார்த்தைகளுடன் அதை வெளிப்படுத்தும் பாணி ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. தன்னைச்சுற்றி நடக்கும் விஷயங்கள், சமூக சர்ச்சைகள், நடிப்பு சார்ந்த விஷயங்கள், தான் ஏற்கும் வித்தியாசமான பாத்திரங்கள் போன்றவற்றைப் பற்றிய தெளிவு அவருக்கு இருக்கிறது. அவற்றைப் பற்றி நுட்பமான வார்த்தைகளால் சொல்லி விடவும் முடிகிறது.
சர்ச்சையான கேள்விகளை ஜாக்கிரதையாகத் தவிர்க்காமல் அவற்றையும் தன்னுடைய பாணியில் சாதுர்யமாக எதிர்கொள்கிறார். பெரும்பாலும் பூசி மெழுகுவதில்லை. தான் சொல்ல வந்ததையும் சொல்லி விடுகிறார். அதே சமயத்தில் யாரையும் காயப்படுத்தாமல் கருத்துக்களை வெளிப்படுத்த முயல்கிறார். மிக இயல்பாக பேசும் தொனியில் அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் ஆழமாக இருக்கின்றன. இதுவே அவருக்கு பல ரசிகர்களைப் பெற்றுத் தந்திருக்கும் அதே சமயத்தில் சில கிண்டல்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.
பொதுவெளியில் வெளிப்படும் இது போன்ற ஆளுமைத்திறன்களும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திச் செல்வதற்கு அவசியமானது. மேலும் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்துவதென்பது விஜய்சேதுபதிக்கு புதிதான விஷயமில்லை. ‘மாஸ்டர் செஃப்’ என்கிற சமையல் போட்டி சார்ந்த ரியாலிட்டி ஷோவை அவர் ஏற்கெனவே தொகுத்து வழங்கியிருக்கிறார். பொதுவாக தொகுப்பாளர்கள் செய்யும் கோணங்கித்தனங்கள் எதுவுமில்லாமல் இயல்பாகவும் அதே சமயத்தில் சுவாரசியமாகவும் ஆங்கரிங் செய்தது ஒரு நல்ல முன்னுதாரணம்.
கமல்ஹாசன் போன்ற பன்முக ஆளுமையின் இடத்தை நிரப்புவதென்பது கடினமான விஷயம்தான். நிச்சயம் சவால்தான். ஆனால் தன்னுடைய இயல்பான அணுகுமுறையாலும் சாதுர்யமான நகைச்சுவையாலும் வித்தியாசமான சிந்தனையாலும் விஜய்சேதுபதி இந்தச் சவாலைக் கடந்து வருவார் என்றுதான் தோன்றுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்.