Puviyarasan Perumal
இந்த மூஞ்செல்லாம் ஹீரோவா?!
நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய்யை ''இந்த மூஞ்செல்லாம் ஹீரோவா'' என தரம் தாழ்த்தி எழுதி விமர்சனம் செய்தது ஒரு பத்திரிகை. பின்னர் அந்த பத்திரிகையே தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் விஜய்தான் என கருத்துகணிப்பு நடத்தி விழா எடுத்தது.
தொடர் தோல்விகள்!
'நாளைய தீர்ப்பு' தொடங்கி 'ரசிகன்', 'தேவா', 'ராஜாவின் பார்வையிலே', 'விஷ்ணு', 'சந்திரலேகா', 'கோயம்புத்தூர் மாப்ள' என விஜய்யின் ஆரம்பக்கட்டப் படங்கள் பலவும் தோல்விப்படங்கள். ‘பூவே உனக்காக’ படம்தான் தமிழ் சினிமாவில் விஜய்க்கென தனி அடையாளம் தந்தது.
காதலுக்கு மரியாதை விஜய்க்கு பெற்றுத் தந்த மரியாதை!
பெண்களின் ‘ஆசை’ நாயகனாக அஜித் இருந்த நிலையில் முதல்முறையாக விஜய்க்கும் ரொமான்டிக் ஹீரோ என்கிற பட்டத்தை தந்ததோடு மட்டுமல்ல, ஏராளமான பெண் ரசிகைகளையும் பெற்றுத்தந்து காதலுக்கு மரியாதை!
சங்கீதாவுடன் திருமணம்!
'காதலுக்கு மரியாதை' வெளியான அடுத்த இரண்டு ஆண்டில் அதாவது 1999-ம் ஆண்டு இலங்கைத் தமிழரான சங்கீதாவைத் திருமணம் செய்துகொண்டார் நடிகர் விஜய். திருமணம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
'கில்லி' தந்த திருப்புமுனை!
'கண்ணுக்குள் நிலவு', 'குஷி', 'பிரியமானவளே' என ரொமான்ஸ் ரூட்டில் பயணித்துக்கொண்டிருந்தவரை மாஸ் ஹீரோவாக அடையாளப்படுத்திய படம்தான் ‘கில்லி'. இந்தப்படத்தின் வெற்றி விஜய்யின் மார்க்கெட்டை உயர்த்தியது. டான்ஸ், காமெடி, ஆக்ஷன் என மூன்றுமே விஜய்க்கு கைகொடுத்ததால் ரஜினிக்கு இணையாக வளர ஆரம்பித்தார்.
மாஸ் ஹீரோ!
'கில்லி' கொடுத்த உற்சாகத்தால் அதே பாணியில் படங்கள் செய்ய ஆரம்பித்தார் நடிகர் விஜய். 'சிவகாசி', 'திருப்பாச்சி', 'போக்கிரி', 'வேலாயுதம்' என ஆக்ஷன் படங்களை செய்ய ஆரம்பித்து அந்தப் படங்கள் பெரிய ஹிட்டாக ரசிகர்களின் எண்ணிக்கைக் கோடிகளைத்தாண்ட ஆரம்பித்தது.
ஆக்ஷன் டு அரசியல் ரூட்!
ரொமான்ஸ் நாயகன், ஆக்ஷன் நாயகனுக்கு அடுத்து அரசியல் நாயகன் ரூட் பிடித்தார் விஜய். 2013-ம் ஆண்டு வெளியான ‘தலைவா’ படம்தான் விஜய்க்கு முதலமைச்சர் நாற்காலி கனவு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது.
அரசியல் விமர்சனம்!
அரசியல் ரூட் பிடித்ததால் தன்னுடைய படங்களில் சமூகக் கருத்துகளையும், அரசியல் விமர்சன வசனங்களையும் பேச ஆரம்பித்தார் விஜய். ‘துப்பாக்கி’ தொடங்கி ‘கத்தி', ‘மெர்சல்', ‘சர்கார்' என அவரது அடுத்தடுத்தப் படங்கள் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தத் தொடங்கின.
சினிமா டு அரசியல்
அரசியல் கருத்துகளை சினிமா வழியே சொல்லிக்கொண்டே வந்தவர் 50-வது பிறந்தநாளுக்கு முன்பாக அரசியல் கட்சியையும் தொடங்கி, ‘GOAT’ அடுத்து ஒரு படத்தோடு சினிமாவுக்கு முடிவு கட்டுகிறேன் என அறிவித்து முழு நேர அரசியலுக்குத் தயாராகிவிட்டார்!