தேசிய விருதுகள்: விருதுகளைக் குவித்த ‘பொன்னியின் செல்வன்1’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’!
கொரோனா காரணமாக இடையில் ஒரு வருடம் விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்ததால் கடந்த 2022ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள்தான் இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழில் ‘பொன்னியின் செல்வன்1’ சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது. இந்தியில ’குல்முஹர்’, தெலுங்கில் ‘கார்த்திகேயா 2’, கன்னடத்தில் ‘கே.ஜி.எஃப் 2’ மற்றும் மலையாளத்தில் ‘சவுதி வெல்லக்கா’ ஆகிய திரைப்படங்களும் அந்தந்த மொழிகளில் சிறந்த படங்களுக்கான தேசிய விருதை வென்றுள்ளது.
சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரஹ்மான், சிறந்த ஒளிப்பதிவிற்காக ரவி வர்மன், சிறந்த ஒலி வடிவமைப்பிற்கு ஆனந்த கிருஷ்ணமூர்த்தி என இந்த வருடம் ’பொன்னியின் செல்வன்1’ திரைப்படம் நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இதுபற்றி நடிகர் விக்ரம் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில், ‘ரசிகர்களின் அன்பால் ‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படத்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தமிழ் வரலாறு, பண்பாடு, கலாசாரம், சினிமா என அனைத்தும் கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்தில் வென்றிருக்கிறது’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல, ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான விருதையும், ‘காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளனர். ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுடைய சிறந்த நடனத்திற்காக ஜானி மற்றும் சதீஷூக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டை பயிற்சியாளர் அன்பறிவு ’கேஜிஎப் 2’ திரைப்படத்திற்காக பெற்றுள்ளனர். இந்த வருடம் ‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படம் மொத்தம் நான்கு விருதுகளையும், ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.