ஜெயம் ரவியுடன் சேர விரும்பும் ஆர்த்தி... தனிப்பட்ட பேச்சுவார்த்தை மறுக்கப்படுவதாக அறிக்கை!
நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து சர்ச்சைதான் கடந்த சில வாரங்களாக இணைய வெளியில் பேசுபொருளாகி வருகிறது. தன் மனைவி ஆர்த்தியுடனான திருமண உறவில் இருந்து ஜெயம் ரவி பிரிவதாக அறிக்கை வெளியிட்டதும் இதுபற்றி தன்னிடம் கேட்காமலேயே முடிவு எடுத்திருப்பதாக பதில் அறிக்க வெளியிட்டார் ஆர்த்தி. ஆனால், இரண்டு முறை ஆர்த்தியிடம் இதுபற்றி சொன்னதாகவும் பாடகி கெனிஷாவிடன் தனக்கு தொடர்பு என்று வந்த செய்திகளையும் ஜெயம் ரவி மறுத்தார்.
பின்பு, 'பிரதர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தவர் ஆர்த்தி தன்னை மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும் சந்தேகப்பட்டு தன்னிடம் சண்டை போட்டதாகவும் தனக்கென்று தனி பேங்க் அக்கவுன்ட் கூட இல்லை என்றும் சொன்னார். இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆர்த்தி பதிலளிக்காமல் இருந்தவர் தற்போது மெளனம் கலைத்திருக்கிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் கொடுக்காமல் அமைதியாக இருப்பதால் நான் பலவீனமானவளாகவோ, குற்றவாளியாகவோ அல்ல. உண்மையை மறைத்து என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும், கண்ணியம் காக்கவும் முடிவு செய்துள்ளேன். சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன்.
எனது முந்தைய அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. பரஸ்பர ஒப்புதலுடன் அந்த அறிக்கை வெளியாகவில்லை என்றுதான் நான் குறிப்பிட்டேன். தனிப்பட்ட உரையாடலுக்காக நான் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வின் மீதுள்ளது. கடவுளின் கிருபை வழிநடத்தும் என நம்புகிறேன்'' எனப்பதிவிட்டுள்ளார் ஆர்த்தி. இந்தப் பதிவிற்கு ''அவர்கள் கீழ்த்தரமாக நடக்கும்போது நாம் மேலே உயர்கிறோம்'' என்ற கேப்ஷனும் கொடுத்துக்கிறார்.