நடிகர் விஜய்யின் 'GOAT' படத்திற்கு முதல் வாழ்த்து சொன்ன நடிகர் அஜித்!
நடிகர் விஜய் நடிப்பில் 'GOAT' படம் இன்று வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் சிறப்பு காட்சி காலை 4 மணிக்கே திரையிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு 9 மணிக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. படத்தில் பல சர்ப்ரைஸ் இருப்பதாக இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினர் சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, அஜித்தின் ரெஃபரன்ஸ் இந்தப் படத்தில் இருப்பதாகவும் அதேபோல, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் விஜயின் ரெஃபரன்ஸ் இருப்பதாகவும் வெங்கட்பிரபு கூறியிருந்தார். இதனால், விஜய்-அஜித் ரசிகர்கள் படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர்.
'GOAT' படம் தொடங்கிய போதே, 'மங்காத்தா’ படம் போல நூறு மடங்கு இருக்க வேண்டும்’ என அஜித் அன்பு கட்டளைப் போட்டதாகவும் வெங்கட்பிரபு சொன்னார். இப்போது 'GOAT' படத்திற்கு முதல் வாழ்த்து சொல்லி இருக்கிறார் அஜித். இந்த விஷயத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வெங்கட்பிரபு, ’விஜய் அண்ணா, எனக்கு மற்றும் 'GOAT' டீமுக்கு முதல் நபராக வாழ்த்து சொன்ன அஜித் அண்ணா உங்களுக்கு நன்றி. லவ் யூ!’ எனக் கூறியிருக்கிறார்.
அதேபோல, 'GOAT' படத்திற்கு முன்பு எந்தப் படத்தையும் பார்க்க வேண்டியது இல்லை என்றும் விஜயைப் பார்த்துத் திரையரங்குகளில் கொண்டாடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.