நடிகர் கவுண்டமணியின் 20 ஆண்டு கால சட்ட போராட்டம்… 50 கோடி ரூபாய் சொத்தை மீட்டார்!
தமிழ் சினிமாவில் எண்பது மற்றும் 90-களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. தற்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 1996-ல் சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள நளினி பாய் என்பவரின் நிலத்தை கவுண்டமணி விலைக்கு வாங்கினார். சுமார் 5 கிரவுண்ட் நிலத்தில் 15 மாதத்தில் வணிக வளாகம் கட்டித்தர சொல்லி தனியார் நிறுவனம் ஒன்றோடு ஒப்பந்தம் செய்திருக்கிறார் கவுண்டமணி. இதற்காக 3.58 கோடி ரூபாய் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு 1996- 1999 காலக்கட்டம் வரையிலான பணிகளுக்கு 1.4 கோடி ரூபாய் கவுண்டமணி கொடுத்திருந்தார்.
ஆனால், 2003-ம் ஆண்டு வரையிலுமே அங்கு பணிகள் தொடங்கப்படாததை அடுத்து நடிகர் கவுண்டமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனியார் நிறுவனம் ரூ.46.51 லட்சத்துக்குப் பணிகள் முடித்திருப்பதை அறிக்கையாக தாக்கல் செய்தது. ஆனால், அந்தப் பணிகளை ஒப்பிடுகையில் பேசப்பட்டதை விட ரூ.63 லட்சம் அதிகம் கொடுத்திருப்பதாக கவுண்டமணி தரப்பு சொன்னது.
இதனால், கவுண்டமணியிடம் நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தனியார் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கினர். இன்று ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு நிலம் மீண்டும் நடிகர் கவுண்டமணியிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.