''நானும் கெனிஷாவும் இணைந்து ஆன்மிக மையம் தொடங்கலாம் என இருந்தோம்'' - ஜெயம் ரவி விளக்கம்!
நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து விவகாரம் கோலிவுட்டில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த விஷயம் ரவியின் தனிப்பட்ட முடிவு என்றும் இதில் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் ஆர்த்தி தனி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பினார். இந்த நிலையில், ஜெயம் ரவி தனது விவாகரத்து முடிவு பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவு படுத்தியிருக்கிறார்.
“கடந்த சில மாதங்களாகவே விவாகரத்து முடிவில் இருந்தேன். இது வேதனையான விஷயம்தான். இரண்டு முறை இதுகுறித்து ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அவரது அப்பா என்னிடம் பேசினார். இரண்டு குடும்பங்களும் இதுபற்றி பேசினார்கள். எனக்கு சந்தோஷம் தரும் விஷயம் எதுவோ அதற்கு சரி என்று என்னுடைய பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். இவ்வளவு நடந்த பிறகும் ஆர்த்தி இதுபற்றி தெரியாது என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. என் பெரிய மகனிடம் இதுபற்றி அவனுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறேன். எல்லா குழந்தைகளும் போல நாங்கள் சேர்ந்து இருக்க வேண்டும் என்றுதான் குழந்தைகள் விரும்புகிறார்கள். மகன்கள் என் பொறுப்பில்தான் உள்ளனர்.
இத்தனை வருட சினிமா வாழ்வில் எந்த நடிகையுடனும் கிசுகிசுவில் சிக்காமல் இருந்தவன் நான். என்னை இன்னொரு பெண்ணுடன் சேர்த்து வைத்து பேசுவது தவறு. அவர் பலருக்கும் உதவி செய்து வருகிறார். நானும் அவரும் இணைந்து ஆன்மீக மையம் ஒன்று அமைக்க இருந்தோம். இந்த உண்மைகள் எல்லாம் ஒருநாள் சீக்கிரம் வெளியே வரும்” என்றார்.