திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!
திருப்பதி கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக சர்ச்சை எழுந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான இந்து மதத்தை பின்பற்றும் மக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லி பரிகாரங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜயவாடாவில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்ஷை என்ற பெயரில் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் விரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் கார்த்தி இந்த வாரம் வெளியாக இருக்கும் தனது ‘மெய்யழகன்’ பட புரோமோஷனுக்காக நேற்று ஹைதராபாத் சென்றிருக்கிறார். அங்கு நிகழ்ச்சி தொகுப்பளார் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என நகைச்சுவையாகக் கேட்டிருக்கிறார். அதற்கு கார்த்தி சிரித்துக் கொண்டே, லட்டு இப்போது சென்சிடிவான விஷயமாகி இருக்கிறது எனவும் அதைப் பற்றி பேச வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இதில் கார்த்தி பேசியுள்ள விஷயம் கேலி செய்யும் தொனியில் இருந்ததாக சர்ச்சை வெடித்தது.
இதுபற்றி பத்திரிக்கையாளர்களிடம் பவன் கல்யாண் பேசியபோது, “சினிமா நிகழ்வில் லட்டுவை கேலி செய்வீர்களா? இது சென்சிடிவான விஷயம். உங்களுக்கு நடிகராக மரியாதை கொடுக்கிறேன். சனாதன தர்மம் என வரும்போது நூறுமுறை யோசித்து பேச வேண்டும்” எனக் கூறியிருக்கிறார். இதற்குதான் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பவன் கல்யாண் மீது தான் அதிக மதிப்பு வைத்திருப்பதாகவும் அந்த நிகழ்வில் தான் பேசிய தொனி தவறாக தோன்றினால் மன்னித்துக் கொள்ளும்படியும் கேட்டிருக்கிறார். திருப்பதி வெங்கடாலச்சத்தின் பக்தன் என்ற முறையில் தானும் மரபுகளை கடைப்பிடிப்பதாகவும் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.