"இதுபோல நடந்ததே இல்லை" - ஹேமா கமிட்டி பற்றி நடிகர் நானி!
கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட ‘ஹேமா கமிட்டி’ அறிக்கை ஒன்றை பல வருட போராட்டத்திற்குப் பின்பு வெளியிட்டது. அதில் கேரள சினிமாத்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் பல முன்னணி நடிகர்கள் பாலியல் ரீதியாக அங்கு பெண்களை துன்புறுத்துகிறார்கள் என்றும் பல அதிர்ச்சி தகவல்களை அதில் வெளியிட்டிருந்தது.
இந்த விஷயம் இந்திய திரையுலக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல விவாதங்களும் இதைச் சுற்றி எழுந்தது. ஹேமா கமிட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரச்சனைகள் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு துணை நிற்கும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்திருந்தார்.
இந்த விஷயம் பற்றி நடிகர் நானி தனது கருத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். “ஹேமா கமிட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. பிரச்சனைகளை சரிசெய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். திரைத்துறை இன்னும் செழுமைப்படுத்த இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இதுபோன்ற விஷயங்கள் என்னைச் சுற்றியோ அல்லது என் செட்டிலோ நடந்தது இல்லை! எப்படி இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே இந்த அறிக்கை நமக்கு உணர்த்துகிறது” என்றார்.