படித்தவர்களைப் பார்த்தால் பயம்; உண்மையை உடைத்த நடிகர் பிரபுதேவா!
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்த திரைப்படம் ‘காதலன்’. இந்தப் படத்தில் ரஹ்மான் இசையில் இடம்பெற்றிருக்கும் ‘பேட்ட ராப்’ பாடல் பயங்கர ஹிட். இந்த வார்த்தை இப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்த வார்த்தையைவே தனது அடுத்தப் படத்திற்கு டைட்டில் ஆக்கியிருக்கிறார் பிரபுதேவா.
எஸ். ஜெ.சினு இப்படத்தை இயக்குகிறார். நடிகர்கள் சன்னிலியோன், வேதிகா, ரமேஷ் திலக் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் 27-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நடிகர் பிரபுதேவா பேசுகையில், ''இந்த படத்தில் பணியாற்றியது மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. இமான் ஏற்கெனவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார். இந்தப் படத்திற்கும் அவர் நல்ல பாடல்களையும், இசையும் வழங்கி இருக்கிறார்.
நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதுண்டு. நான் எப்போதும் எம்ஜிஆர் ஃபார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன். பாலிவுட் நடிகர் சல்மான்கான் 'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை பார்த்துவிட்டு அதனை இயக்கிய இயக்குநர் பேரரசுவை பற்றி என்னிடம் பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார்.
''அந்தத் திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா'’ என என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் 'பேட்ட ராப் ' படத்திற்கு வாழ்த்த வருகை தந்த இயக்குநர் பேரரசுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகை வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்குமா? அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன்.
சன்னி லியோன் நடிகை என்பது கடந்து அனைவரையும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். செப்டம்பர் 27-ம் தேதியன்று 'பேட்ட ராப்' வெளியாகிறது. இதற்காக முதலில் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இந்த வார்த்தையை எழுதியவர் அவர்தான். அதனுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.