’குறி வெச்சா, இரை விழணும்’; ’வேட்டையன்’ படத்தின் டப்பிங் தொடங்கிய ரஜினிகாந்த்!
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ படம் வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து ரஜினி-அமிதாப் ஒரே படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளா, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர்கள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா ஆகியோர் தங்கள் டப்பிங் பணிகளை முடித்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார். காரில் இருந்து இறங்கி வந்து டப்பிங் ஸ்டிட்யோவில் ‘குறி வச்சா இரை விழனும்’ என்கிற வசனத்தை ரஜினிகாந்த் ஸ்டைலாக பேசும் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. உடன் இயக்குநர் ஞானவேலும் இந்த வீடியோவில் உள்ளார். ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.