அமெரிக்காவில் ஆரம்பமான 'வேட்டையன்'... 'ஜெயிலர்' படத்தைவிட நல்லாயிருக்கா?!
’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 மணிக்கே படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும், அண்டை மாநிலமான கேரளா போன்ற இடங்களிலும் அதிகாலை 4 மணிக்கே படத்தின் முதல் காட்சி ஆரம்பமாகியிருக்கிறது என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். இதுமட்டுமல்லாது, படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனமும் வந்திருக்கிறது.
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரக்கூடிய ரஜினிகாந்த் கல்வித்துறையில் நடக்கும் விஷமங்களால் மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அதை அவர் எப்படி கையாள்கிறார் என்பதுதான் கதை. கல்வித்தந்தையாக வில்லத்தனம் காட்டுகிறார் ராணா. அவர் ஆசிரியர் ஒருவரை கொலை செய்யும் விஷயத்தைத்தான் ரஜினி விசாரணை செய்கிறார். அவரை என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ள ரஜினி முடிவு செய்யும்போது அமிதாப் அதில் குறுக்கிடுகிறார். பின்பு ரஜினி vs அமிதாப் என நீளும் கதைதான் படம். பல அனல் தெறிக்கும் வசனங்கள், 'மனசிலாயோ' பாடல் வைப், நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, அனிருத் இசை, ரஜினியின் மாஸ் உள்ளிட்டவை படத்தின் ப்ளஸ் என்கிறனர் இணையவாசிகள்.
அதேபோல, படத்தில் பல வசனங்கள் மாஸாக இருந்தாலும் சில வசனங்கள் மாஸ் என நினைத்து எழுதி மொக்கை வாங்கியிருக்கிறார்கள் என்றும் இரண்டாம் பாதி மெதுவாகவே நகர்கிறது என்றும் சொல்லி வருகிறார்கள். இன்னும் சிலர் ‘ஜெயிலர்’ படத்தை விட ‘வேட்டையன்’ படம் நன்றாக இருக்கிறது என்கிறார்கள்.