ஹன்ட்டர் வன்ட்டார்... 'வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்!
ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினி, அமிதாப், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது என்பதை நேற்று படக்குழு உறுதி செய்தது. சூர்யாவின் ‘கங்குவா’ படமும் இதே தேதியில் வெளியாவதால் ‘வேட்டையன்’ vs ’கங்குவா’ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் படத்தின் அப்டேட்டை படக்குழு அடுத்தடுத்து கொடுத்து வருகிறது.
அந்த வகையில், ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ...’ விரைவில் வெளியாக இருப்பதை இசையமைப்பாளர் அனிருத் உறுதி செய்திருக்கிறார். இந்தப் பாடலுக்கான ஹேஷ்டேக்காக ‘ஹன்ட்டர் வன்ட்டார்’ என்பதையும் ஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள். இந்தப் பாடலை ‘ஜெயிலர்’ படத்தில் ‘ஹூக்கும்...’ பாடல் எழுதிய சூப்பர் சுப்புதான் எழுதியிருக்கிறார். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவரது வரிகள் ‘ஹூக்கும்’ பாடலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக அவருக்கு ரஜினி படத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், ‘மனசிலாயோ...’ பாடலுக்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு உள்ளதாகக் கூறி வருகின்றனர்.