ரஜினியின் ’வேட்டையன்’ அக்டோபர் 10 ரிலீஸ்... சூர்யாவின் 'கங்குவா' தள்ளிப்போகுமா?!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தை ஞானவேல் இயக்கி இருந்தார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. ‘ஜெய்பீம்’ படத்தை அடுத்து ஞானவேல் நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்தப் படத்திற்கு ‘வேட்டையன்’ என டைட்டில் வைத்து, அடுத்தடுத்த அப்டேட்ஸையும் படக்குழு ரசிகர்களுக்குக் கொடுத்து வந்தது. கேரளா, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 10 எனப் படக்குழு உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரஜினியுடன் பல வருடங்கள் கழித்து அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளார். இவர்களோடு மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலரும் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே, சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படமும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், ரஜினி vs சூர்யா என்ற பேச்சு இணையத்தில் எழுந்திருக்கிறது.
இதற்கிடையே ''ரஜினி படத்துடன் ஒரு காலத்திலும் நேருக்கு நேர் மோத மாட்டோம்'' என 'கங்குவா' படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முன்பு பேட்டியளித்திருந்தார். ஆனால், இப்போது சூர்யாவின் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டப்பிறகும் ரஜினி படம் அதே நாளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் சூர்யாவின் 'கங்குவா' படம் தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.