"பாலியல் புகார்களை வைத்து பணம் சம்பாதிக்காதீர்"... நடிகர் சுரேஷ் கோபி ஆத்திரம்!
பல வருட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. அதில் கேரள சினிமாத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் வாய்ப்புகளுக்காக முன்னணி நடிகர்கள் பலர் நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றும் அதிர்ச்சி தரும் வகையில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் அரசு நிற்கும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும் அதற்கு காரணமான நடிகர்கள் பற்றியும் கடந்த சில நாட்களாக வெளிப்படையாக பேட்டியளித்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இன்று நடிகர் மற்றும் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“பாலியல் புகார்கள் தற்போது குற்றச்சாட்டுகளாக உள்ளது. இதுபற்றி நீதிமன்றம் முடிவெடுக்கும். நீங்கள் ஏன் இதுபற்றி கேட்கிறீர்கள்? இந்த செய்தியை பெரிதாக்கி திரையுலகத்தை நிலைதடுமாற வைக்கிறீர்கள். ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைத்துள்ளது. பாலியல் செய்தியை வைத்து பணம் சம்பாதிக்கிறீர்கள்” என்று ஆத்திரப்பட்டு பேசியிருக்கிறார்.