படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு காயம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் சூர்யா ‘கங்குவா’ படத்தை முடித்துவிட்டு தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் ஷெட்யூல் அந்தமானில் நடந்தது. கிட்டத்தட்ட ஒருமாத கால அளவில் அங்கு நடந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் சில முக்கிய போர்ஷனும் படமாக்கப்பட்டிருக்கிறது.
நடிகை பூஜா ஹெக்டேவும் அந்தமான் போர்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அந்தமானில் படப்பிடிப்பு முடிந்ததும் இப்போது ஊட்டியில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
இங்குதான் நடிகர் சூர்யாவுக்கு எதிர்பாராதவிதமாக தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. சண்டைக் காட்சியின்போது தான் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்திருக்கிறது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.
சின்ன காயம் என்பதால் சில நாட்கள் நடிகர் சூர்யாவை ஓய்வு எடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்களாம். இன்னும் சில நாட்களில் ஊட்டி ஷெட்யூல் முடிவதாக இருந்த நிலையில், சூர்யாவுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது படக்குழுவினரை அப்செட் ஆக்கியிருக்கிறது. ஓய்விற்காக சூர்யா இப்போது சென்னை திரும்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.