நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு... 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு நெருக்கடி!
நடிகர் வடிவேலுக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையில் பல காலமாக பிரச்சனை நிலவி வருகிறது. தாம்பரத்தில் சர்ச்சைக்குரிய இடத்தை சிங்கமுத்து வாங்கிக் கொடுத்ததற்காக அவர் மீது ஏற்கனவே வடிவேலு வழக்குத் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பல்வேறு யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாகவும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் பேசியதற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு சிங்கமுத்து கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வடிவேலு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
வடிவேலு கொடுத்துள்ள அந்த மனுவில், “நான் நகைச்சுவை நடிகனாக இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். நானும் சிங்கமுத்துவும் பல படங்களில் இணைந்து நடித்தோம். ஆனால், என்னைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக அவர் யூடியூப் சேனல்களில் பேசி வந்ததால் அவருடன் இணைந்து நடிப்பதை 2015-ல் இருந்து தவிர்த்து வந்தேன். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அவர் ரூ. 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும்” என நடிகர் வடிவேலு கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன் இரண்டு வாரங்களுக்குள் சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.