விஜய் கட்சி கொடி : ''இறைவனும், இயற்கையும் அமைத்துக்கொடுத்த நாள்''... மகிழ்ச்சியில் தவெக!
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்ட நகர்வை எடுத்து வருகிறார். ‘GOAT’ படத்திற்கு அடுத்து தன்னுடைய 69-வது படத்தில் நடித்து முடித்து சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இயங்கும் விஜய் தனது கட்சிக்கான கொடியையும் கட்சிப் பாடலையும் நாளை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறார். நேற்று முன் தினம் தனது வீட்டில் மஞ்சள் நிறத்திலான கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக இன்று எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘சரித்திரத்தின் புதிய திசையாகவும் விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் நம் வீரக் கொடியை வெற்றி கொடியை நாளை நம் தலைமையின் நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தி கழக கொடி பாடலை வெளியிட்டு, கழக கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும்'’ என மகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார் விஜய்.