பெரியார் பிறந்தநாள்... நேரில் சென்று மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்!
சுயமரியாதை கருத்துகள் ஓங்கி ஒலித்த தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் சுயமரியாதை கருத்துகளைப் பலரும் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய்யும் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி வாழ்த்து குறிப்பு ஒன்றைப் பகிர்ந்தார். அதில், ''சாதி, மதம் போன்ற மூட நம்பிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற விடுதலை வேட்கையை ஏற்படுத்தி சமூக ஏற்றத்தாழ்வுகளை அறுத்தெறிந்தவர்.
பெரியாரின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய பெண்கள் பாதுகாப்பு, பெண் கல்வி, சமத்துவம், சம உரிமை, சமூகநீதி பாதையில் பயணிப்போம்’ எனப் பதிவிட்டிருக்கிறார்.
இதுமட்டுமல்லாது, இன்று பெரியார் திடலுக்கு சென்றுள்ள விஜய் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மலர் தூவி, மாலை அணிவித்துள்ளார். இன்று மாலை அவர் அதிகாரப்பூர்வமாக மாநாட்டு தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.