வேளாங்கண்ணியை தவிர்த்து ஷீரடிக்கு கிளம்பிய நடிகர் விஜய்... காரணம் என்ன?
நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடுதான் கடந்த சில நாட்களாகப் பேசுபொருளாக இருக்கிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய். கட்சி கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை மற்றும் வாகை மலர் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த கொடியை சுற்றி சுவாரஸ்ய வரலாறு இருப்பதாகவும் அதனை தவெக-வின் முதல் மாநாட்டில் தெரிவிப்பதாகவும் விஜய் கூறியிருந்தார். மேலும் கொடி அறிமுக விழாவில் கட்சிக்கான பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு தேதி குறித்திருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு வழிபாடு செய்ய நடிகர் விஜய் இன்று அதிகாலை சென்னை, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் சென்றிருக்கிறார்.
ஒவ்வொரு பட ரிலீஸூக்கு முன்பாகவும் வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு விஜய் செல்வது வழக்கம். நேற்று வேளாங்கண்ணியில் மேரி மாதாவுக்கு தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விஜய் கூட்டம் காரணமாக கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையே இன்று ஷீரடி கிளம்பியிருப்பது அவரது அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை காட்டுவதாகச் சொல்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
தமிழக வெற்றிக் கழகம் என விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததும் அவர் முன்னெடுக்கும் முதல் பெரிய விஷயம் மாநாடு என்பதால் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவரது தாயார் ஷோபாவின் வழிகாட்டுதலின் பேரில்தான் விஜய் சாய் பாபா கோயிலுக்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. கூடவே புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சிலரும் விஜய்யுடன் சென்றிருக்கிறார்கள். செப்டம்பர் 5-ம் தேதிக்கு முன்பாக விஜய் வேளாங்கண்ணி பேராலயத்துக்கும் சென்று மாதாவை வழிபடுவார் என்கிறார்கள் விஜய்யின் நண்பர்கள்.