GOAT ட்ரெய்லர் : ப்ளே பாய் காந்தியும், பேரன்ட் காந்தியும்… என்ன சொல்கிறது விஜய் - விபி காம்போ?!
தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சி தொடங்கி தனது அரசியல் பயணத்தை அறிவித்தப் பின்பு நடிகர் விஜய் தனது கடைசி இரண்டு படங்களாக 'GOAT' மற்றும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தை அறிவித்திருக்கிறார். இதில் 'GOAT' திரைப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.
அண்ணன் வர்றார் வழி விடு என்கிற எழுத்துகளோடும், பிரசாந்த் விஜய்க்குத் தரும் பில்ட் அப்போடும் ட்ரெய்லர் தொடங்குகிறது. ‘’உங்களை லீட் பண்ணப்போறது புது லீடர்… 68 சக்ஸஸ்ஃபுல் ஆப்பரேஷன்ஸ்… ஹாஸ்டைல் நெகோஷியேட்டர், ஃபீல்ட் ஏஜெண்ட், ஸ்பை, இன் ஷார்ட் ஹி இஸ் எ அ கோட் ஆஃப் ஸ்குவாட்ஸ்'' என விஜய்யை பிரசாந்த் தன்னுடைய அணியினருக்கு அறிமுகப்படுத்த விஜய்யின் என்ட்ரி தொடங்குகிறது.
அதிரடியும், எமோஷனும் நிரம்பிய கதையை ட்ரெய்லரில் முன்வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. விஜய் தனது வழக்கமான காமெடியும், ஆக்ஷனும் கலந்த நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார். சாகசக் காட்சிகள் தீவிரமாகவும், த்ரில் தரும் விதமாகவும் இருக்கிறது.
படத்தில் விஜய்யின் கேரெக்டர் பெயர் காந்தி. அப்பா, மகன் என டபுள் ஆக்ஷன். ஒரு காந்தி ப்ளே பாயாகவும், இன்னொரு காந்தி பொறுப்பான பேரன்ட்டாகவும் இருக்கிறார்கள். விஜய்யின் டீமில் பிரசாந்த்தும், பிரபுதேவாவும் இருக்க, ‘’நான் அனுபவிச்ச பெயினை காந்தியும் அனுபவிக்கனும்'’ என வில்லனாக நுழைகிறார் ‘மைக்' மோகன். நிஜத்தில் விஜய்யின் மாமாவான எஸ்.என் சுரேந்தர்தான் முன்பு மோகனுக்கு டப்பிங் கொடுத்தவர். ஆனால், அவருக்குப் பதிலாக இப்போது வேறு டப்பிங் குரல் ஒலிப்பதுபோல இருப்பதால் மோகன் குரலுக்கு என்னாச்சு என்று சந்தேகம் எழுகிறது.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, ட்ரெய்லரின் ஆக்ஷன் டெம்ப்போவை இன்னும் மாஸாக தட்டித் தூக்கியிருக்கிறது. ஒய்.ஜி மகேந்திரன் க்ளைமேக்ஸுக்கு லீட் தரும் வகையில் ‘’எவ்ளோ வயசானா என்னய்யா... எ லயன் இஸ் ஆல்வேஸ் எ லயன்'’ என்கிறார். ட்ரெய்லரின் முடிவில் ‘கில்லி' படத்தில் விஜய் பாடி ஹிட் அடித்த மருதமலை மாமணியே முருகைய்யா…தேவரின் குலம் காக்கும் வேலைய்யா… அய்யா’’ என்று விஜய் பாட, இறுதியில் ''ஐ’ம் வெயிட்டிங்'' எனக் குரலோடு ட்ரெய்லர் முடிவடைகிறது.
மொத்தத்தில், GOAT ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. தளபதி விஜய்யின் ரசிகர்கள், வெங்கட் பிரபுவின் படங்களை ரசிப்பவர்கள், தமிழ் சினிமா ரசிகர்கள் என எல்லோருக்குமே இந்த ஆண்டின் மிகப்பெரிய ட்ரீட்டாக இந்தப்படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்!