விஜய்யின் தவெக கொடிக்கு வந்த சிக்கல்... தேர்தல் ஆணையம் அதிரடி பதில்!
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தவெக கட்சியைத் தொடங்கினார். பின்னர், கடந்த ஆகஸ்ட் 22 அன்று கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். மேலே, கீழே சிவப்பு மற்றும் நடுவில் மஞ்சள் நிறம் இருக்கும்படி அந்தக் கொடி வடிவமைக்கப்பட்டு இருந்தது. நடுவில் வாகை மலரும் அதன் இருபுறமும் போர் யானைகள் பிளிறும்படியும் இருந்தது.
இதில் இடம்பெற்றிருந்த யானைக்குதான் சிக்கல் எழுந்தது. அதாவது, தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை. இதைத்தான் தவெக தனது கொடியில் பயன்படுத்தி இருக்கிறது எனவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி புகார் தெரிவித்தது.
இதற்கு தற்போது தேர்தல் ஆணையம் பதிலளித்திருக்கிறது. அதாவது, ஒரு கட்சியின் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது எனத் தெரிவித்திருக்கிறது. மேலும், ஒரு கட்சியின் கொடிக்கு தாங்கள் ஒப்புதலோ அங்கீகாரமோ கொடுப்பதில்லை எனவும் தேர்தல் சமயத்தில் தவெக யானை சின்னத்தை பயன்படுத்த முடியாது என்றும் கூறியிருக்கிறது. தவெக கொடிக்கு எழுந்த சிக்கல் நீங்கியுள்ளது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தவெகவின் முதல் மாநாடு அடுத்த மாதம் விழுப்புரத்தில் நடக்க இருக்கிறது.