செப்டம்பர் 23... விக்கிரவாண்டியில் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு!
தமிழக வெற்றிக் கழகம் என கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜய் கடந்த வாரத்தில் தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். மேலே-கீழே சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும் இந்தக் கொடியில் இடம்பெற்றிருக்கிறது. நடுவில் பிளிறும் இரு போர் யானைகளும், வாகை மலரும் அதைச்சுற்றி நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தது. கொடி உருவானதன் சுவாரஸ்ய கதையை கட்சி மாநாட்டில் தெரிவிப்பதாக விஜய் கூறியிருக்கிறார்.
ஆனால், கட்சி கொடி அறிமுகப்படுத்திய முதல் நாளிலேயே அதைச் சுற்றி சர்சை எழுந்தது. இந்த யானைகள் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் எனவும், கொடியில் இருப்பது வாகை மலரே இல்லை என்றும் சொல்லப்பட்டது. இதுபோன்ற சர்ச்சைகளுக்கு எல்லாம் விஜய் தவெக முதல் மாநாட்டில் பதிலளிப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.
இதற்கிடையே விஜய் அரசியல் கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடக்கிறது. தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு விழுப்புரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திருமாலிடம் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.