பெண்களிடம் அத்துமீறுபவர்களுக்கு தண்டனை வேண்டும்... நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி!
கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளத் திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பல முன்னணி நடிகர்கள் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொல்லி பெண்களிடம் அத்துமீறிய சம்பவங்களும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. ‘அம்மா’ சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உட்பட 16 செயற்குழு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். பல நடிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுபற்றி நடிகர் விஷாலிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ”திரைத்துறையில் 20% பேருக்குதான் வாய்ப்பு கிடைக்கிறது. மீதம் 80% பேருக்கு வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் கிடைக்கிறது. இல்லை எனில் வாய்ப்புக் கொடுப்பதாகச் சொல்லி அவர்களிடம் அத்துமீறல் நடக்கிறது. நாம்தான் சுதாரித்து செயல்பட வேண்டும். திரைத்துறையில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க நாங்கள் போலீஸ் கிடையாது.
ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களிடம் அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். ஹேமா கமிட்டி போல தமிழ்த் திரையுலகிலும் நடிகர்கள் சங்கம் சார்பில் பத்துபேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். விரைவில் அதுபற்றி அறிவிப்பு வரும்” என்றார்.